அன்புள்ள சுஹாஸ் பிரதர்...'Hide & Silk' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி!

'மண்டாடி' திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து சுஹாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
 Actor Soori
Published on: 
Summary

நடிகர் சூரி சுஹாஸின் புதிய முயற்சிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

மண்டாடி நடிகர் சுஹாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு 'Hide & Silk' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூரி சுஹாஸின் புதிய முயற்சிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பட்டுப்புடவைகளை நெய்யும் நெசவாளரின் வாழ்க்கையும், நவீன காலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைகிறது என்பதைப் பேசும் ஒரு வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டைட்டில் ப்ரோமோவில் நடிகர் சுஹாஸ் பட்டுப்புடவை நெய்வது போன்ற காட்சிகளும், மூத்த நடிகர் தனிகெல்லா பரணியின் கவித்துவமான குரல் பதிவும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

'மண்டாடி' திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து சுஹாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக 'லப்பர் பந்து' மற்றும் 'டிசி' போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் தனிகெல்லா பரணி, நந்து மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் சார்பில் வர்திகா ஜெயின் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார், கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர் சூரி வாழ்த்து

சுஹாஸின் இந்தப் புதிய முயற்சி குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "அன்புள்ள சுஹாஸ் பிரதர், உங்களது புதிய முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது; 'Hide And Silk'-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எங்களுக்காக நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!" இவ்வாறு சூரி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இப்படம் குறித்த வெளியீட்டுத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com