பிரபலங்கள் வெளியிட்ட 'ஹோப்' குறும்படத்தின் டிரெய்லர்: உலகத் தரத்தில் ஆந்தாலஜி திரைப்படமாக மாறுகிறது!

இக்குறும்படம் ஏற்கனவே சிம்லா மற்றும் கல்கத்தா திரைப்பட விழாக்களுக்குத் தேர்வாகிப் பாராட்டைப் பெற்றுள்ளது.
Hope Short Film
Published on
Summary

திரைப்பட பட்ஜெட்டில், படைப்பாக்கத்தில் எந்தவொரு சமரசமும் இன்றி உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'ஹோப்' என்ற 30 நிமிட குறும்படத்தின் முதல் பார்வை மற்றும் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரபலங்கள் ஆதரவு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஸ்ரீகணேஷ், பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இணைந்து இப்படத்தின் டிரெய்லரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தேசிய விருது கலைஞர்களின் கூட்டணி

டிரைபாட் டிராவல் மற்றும் டி ஹெச் எஃப் ஃபிலிம் கார்ப்பொரேஷன் பேனர்களில் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் இணைந்து தயாரித்துள்ள இக்குறும்படத்தை ராமு கண்ணன் இயக்கியுள்ளார்.

இவர்களுடன் 'நாடோடிகள்' புகழ் அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு 'சவுதி வெள்ளக்கா' படத்திற்காக 2022-ல் தேசிய விருது வென்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலி பிரான்சிஸ் முதன்முறையாகத் தமிழில் இசையமைத்துள்ளார்.

2023-ல் தேசிய விருது வென்ற சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் எம் ஒலிக் கலவையை கையாண்டுள்ளனர். கோபி துரைசாமி ஒளிப்பதிவையும், இயக்குநர் ராமு கண்ணனே படத்தொகுப்பையும் தயாரிப்பு வடிவமைப்பையும் கையாண்டுள்ளார்.

ஆந்தாலஜி திரைப்படமாக உருமாற்றம்

வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களை 'நம்பிக்கையுடன்' கையாள்வதே இதன் முக்கியக் கதைக்களமாகும்.

இக்குறும்படம் ஏற்கனவே சிம்லா மற்றும் கல்கத்தா திரைப்பட விழாக்களுக்குத் தேர்வாகிப் பாராட்டைப் பெற்றுள்ளது.

தற்போது இந்த 30 நிமிடப் படத்துடன் த்ரில்லர், நகைச்சுவை, ஆக்ஷன் என மேலும் மூன்று கதைகளை இணைத்து, முழு நீள ஆந்தாலஜி திரைப்படமாக உருவாக்கும் பணிகளில் இயக்குநர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தியேட்டர்களில் முன்னோட்டம்

இப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்கில் திரையிடப்படும் அனைத்துத் திரைப்படங்களின் இடைவேளையின் போதும் பிரத்யேகமாகக் காண்பிக்கப்பட்டு வருகிறது.

தன் மீதும் தனது படைப்பின் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்துப் பிரபலங்களுக்கும் இயக்குநர் ராமு கண்ணன் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com