'ஸ்டார் டிரக்' புகழ் பிரிட்டிஷ் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் மறைவு

பேட்ரிக்கின் தந்தை இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர் ஆவார். அங்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க குடிப்பழக்கதிற்கு ஆளான அவர் மனைவியை உடல்ரீதியாக துன்புறுத்தக்கூடுயவராக இருந்துள்ளார்.
சர் பேட்ரிக் ஸ்டீவர்ட்
Published on: 
Summary

'ஸ்டார் டிரக்' புகழ் பிரிட்டிஷ் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பழம்பெரும் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார். அவருக்கு வயது 86.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இல்லத்தில் பேட்ரிக் நேற்று காலமானதாக அவரது எக்ஸ் கணக்கு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைவு

இறக்கும் தருவாயில் அவரது மனைவி சன்னி ஊசெல் உடன் இருந்ததாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்சைமர் மற்றும் ல்யூவி பாடி டிமென்டிசா நோயினால் பேட்ரிக் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் இயற்கை எய்தி உள்ளார்.

அவருக்கு மூன்று திருமணங்கள் நடந்துள்ளன. முதல் மனைவியுடன் 3 குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது அவரது மனைவியாக உள்ள சன்னி ஒரு பாடலாசிரியர் பாடகர் ஆவார். 2008 இல் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து 2013 இல் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இளமை

1940, ஜூலை 13 அன்று இங்கிலாந்தின் யோர்க்சைர் நகரில் உள்ள மிர்பீல்ட் பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பேட்ரிக் பின்னாட்களில் பிரிட்டனில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். அவருக்கு சர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்ரிக்கின் தந்தை இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர் ஆவார். அங்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க குடிப்பழக்கதிற்கு ஆளான அவர் மனைவியை உடல்ரீதியாக துன்புறுத்தக்கூடுயவராக இருந்துள்ளார். வறுமை மற்றும் தந்தையின் வன்முறையால் சிறுவயது முதலே பேட்ரிக் பாதிக்கப்பட்டிருந்தார்.

நாடகம் டூ சினிமா

12 வயதில் அவரின் பள்ளி ஆசிரியர் தான் முதல் முதலில் அவருக்கு சேக்ஸ்பியரின் மெர்சன்ட் ஆப் வெனிஸ் நடாகத்தை அறிமுகப்படுத்துகிறார்.

அதில் ஏற்பட்ட ஆர்வம் அவரை மேடை நாடகத்தை நோக்கியும், அதன்பின் தொலைக்காட்சியை நோக்கியும் பின்னர் சினிமாவை நோக்கியும் இட்டுச் சென்றது.

தனது 18 வயதில் நடிப்பை தொடங்கிய பேட்ரிக், ஷேக்பியர் நாடகங்களில் நடித்தன் மூலம் கவனம் பெற்றார்.

ஆனால் அவர் தனது 47 வயதில் நடித்த ஸ்டார்டிரக்: தி நெக்ஸ்ட் ஜெனரேசன் சீரீஸ் மூலம் தான் பெரிய அளவிலான கவனத்தை பெறுகிறார்.

அந்த தொடர் 1987 முதல் 1994 வரை ஒளிபரப்பாகியது. அதில் அவர் கேப்டன் ஜீன் லுக் பிக்கார்ட் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் ஸ்டார் டிரக் படங்களிலும் அவர் அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

2022 இல் அளித்த ஒரு பேட்டியில், தனது நிஜ வாழ்க்கையிலும் அந்த கதாபாத்திரத்தின் குணங்கள் தனக்குள் தாக்கம் செலுத்தியதாக, தான் உண்மையில் அந்த கதாபாத்திரம் தான் என எண்ண வைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

தவிர ஹாலிவுட்டில் மார்வெல் உடைய எக்ஸ் மென் படங்களில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமும் பேட்ரிக்குக்கு உலகளவில் புகழ் கிடைத்தது. மேலும் பல்வேறு ஹாலிவுட் படங்களில் அவர் தோன்றியுள்ளார்.

அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X