'பிரேக்கிங் பேட்' தொடர் நடிகர் 34 வயதில் அகால மரணம்

3 வயது முதல் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஆர்.ஜே. மிட்டே
Published on: 
Summary

'பிரேக்கிங் பேட்' தொடரில் வால்டர் ஒயிட் ஜூனியர் பாத்திரத்தில் நடித்த நடிகர் ஆர்.ஜே. மிட்டே காலமானார்.

'பிரேக்கிங் பேட்' தொடரில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஆர்.ஜே. மிட்டே காலமானார். அவருக்கு வயது 34.

பிரேக்கிங் பேட் தொடரின் நாயகனும், அந்த தொடரில் மிட்டேக்கு தந்தையாக நடித்தவருமான பிரையன் கிரான்ஸ்டன் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

அந்த தொடரில் மிட்டே ​​வால்டர் ஒயிட் ஜூனியர் என்ற கதாபாத்திரத்தில் பெருமூளை வாதம் (Cerebral Palsy) ஏற்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனாக நடித்திருந்தார்.

மிட்டே நிஜத்திலும் தன் 3 வயது முதல் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

எனவே இந்த தொடரின் நடித்ததன் மூலம் கிடைத்த புகழை அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் பயன்படுத்தினார்.

அவர் மிட்டே அறக்கட்டளை என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர் ஆவார். மேலும் மிட்டே திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு காதலியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

மரணம்

இந்நிலையில் டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லில் உள்ள அவரது வீட்டில் நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில் ஆர்.ஜே. மிட் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மரணத்திற்கான காரணத்தை வெளியிட முடியாது என்றும், ஆனால் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.ஜே. மிட்டே சமீபத்தில் "தி ஜோ வல்பிஸ் பாட்காஸ்ட்" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, "பிரேக்கிங் பேட்" தொடர் தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது பற்றிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

பிரையன் கிரான்ஸ்டன் உருக்கம்

சக நடிகர் பிரையன் கிரான்ஸ்டன், மிட்டே மரணம் குறித்து, "சில வாரங்களுக்கு முன்புதான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் - மதிய உணவிற்குச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தோம். அந்த மதிய உணவு அவருடைய எதிர்காலத்தை மாற்றியிருக்குமா என்று எனக்குத் தெரியாது.

ஆனால், நான் அவரை மிகவும் நேசித்தேன் என்பதும், 'பிரேக்கிங் பேட்' தொடரின்போதும், அதன் புகழ் மங்கிய பிறகும், பல ஆண்டுகளாக அவருடன் நேரம் செலவழிப்பதை நான் முழுமையாக ரசித்தேன் என்பதும் எனக்குத் தெரியும். உன்னை இழந்து தவிப்பேன், மகனே." என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெருமூளை வாதம்

பெருமூளை வாதம் என்பது ஒரு நபரின் தசை இயக்கத்தை பாதிக்ககூடியது. இந்த நிலை பொதுவாக பிறப்பிற்கு முன்னரோ, பிறப்பின்போதோ, அல்லது பிறந்த உடனேயோ ஏற்படும் மூளை பாதிப்பால் உண்டாகிறது.

இந்த நிலை தசைகளில் அதீத விறைப்பு அல்லது தளர்ச்சி, உட்காருதல், நிற்றல் அல்லது நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பல சந்தர்ப்பங்களில், கேட்டல், பார்த்தல் மற்றும் பேச்சுப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com