5 நாட்களாக பூட்டிக் கிடக்கும் வீடு- ‘பிக்பாஸ்’ பிரபலம் முத்துக்குமரன் தலைமறைவு - தீவிரமாக தேடி வரும் போலீசார்!

கடந்த 5 நாட்களாக முத்துக்குமரனின் வீடு பூட்டிக் கிடப்பதாகவும், அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Bigg Boss Muthukumaran
Published on: 
Summary

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் அளித்த புகாரின் பேரில், ‘பிக்பாஸ்’ பிரபலம் முத்துக்குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

புகாரின் பின்னணி

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்றும் தனது மேடைப் பேச்சுகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் முத்துக்குமரன். இவர் தன்னுடன் நெருக்கமாகப் பழகி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதற்கிடையே, தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பி, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி அந்தப் பெண் மீது முத்துக்குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்தப் புகாரில் குற்றவியல் வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை எனப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு மற்றும் தலைமறைவு

அதைத்தொடர்ந்து, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி, அந்தப் பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துக்குமரன் மீது புகார் அளித்தார். இந்தப் புகார் மனு மேல் விசாரணைக்காக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 69-ன் கீழ் முத்துக்குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக முத்துக்குமரனுக்கு சம்மன் அனுப்பி, நேரில் ஆஜராகச் செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால், கடந்த 5 நாட்களாக முத்துக்குமரனின் வீடு பூட்டிக் கிடப்பதாகவும், அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

போலீசார் தீவிர தேடுதல்

தற்போது தலைமறைவாக உள்ள முத்துக்குமரனைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரது செல்போன் எண்ணைக் கொண்டு அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் புகார் அளித்த பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் விருப்பப்பட்டே நெருங்கிப் பழகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அடுத்தகட்டமாக எந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது குறித்துப் போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். முத்துக்குமரனைப் பிடித்து விசாரணை நடத்தும் பட்சத்தில், அவர் மீது தவறு இருப்பது உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

X