

குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற நடிகர் அஸ்வின், தனது காதலியான புவனேஸ்வரியை கோவையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். புவனேஸ்வரி பிரபல இயக்குநர் ராஜசேகரின் பேத்தி ஆவார். திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தியவர் நடிகர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியின் மூலம் பெண்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவருடைய ஸ்டைல், சமையல் செய்யும் விதம், கோமாளிகளுடன் அவர் பேசுவது, சிவாங்கியிடம் கலாட்டா செய்வது போன்றவை ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா, செம்பி, ஹாட்ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். செம்பி படத்தில் அவருடைய நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்தது. இரட்டைவால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே ஆகிய டி.வி. சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.
அஸ்வின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்துள்ள அவர் சினிமா மோகத்தில் சென்னை வந்து இன்று பல படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். இந்தநிலையில் அவர் தான் காதலித்து வந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். அஸ்வின்- புவனேஸ்வரி திருமணம் கோவையில் இன்று உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.
மணப்பெண் புவனேஸ்வரியும் சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தாத்தா ராஜசேகர் பிரபல டைரக்டராக இருந்தவர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாப்பிள்ளை, மாவீரன் போன்ற படங்களை இயக்கியவர் ராஜசேகர். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். ராஜசேகர் இறந்துவிட்ட நிலையில் அவரது பேத்தியான புவனேஸ்வரியை நடிகர் அஸ்வின் காதலித்து கரம் பிடித்துள்ளார். அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரும் அஸ்வின் இப்போது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதுவரைக்கும் அவருடைய திருமண விஷயமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை தான் திருமண நடக்கும் விஷயமே பலருக்கும் தெரிய வந்தது.
அதற்கு பிறகு அனைவரும் அவருக்கு வாழ்த்துகள் சொல்லி வந்தனர். ஆனால் மணப்பெண் யார் என்ற புகைப்படம் மட்டும் வெளியாகாமல் ரகசியமாக இருந்த நிலையில், இப்போது இவர் தாலி கட்டும் வீடியோக்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு மனைவியோடு எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சந்தோஷமாக அஸ்வினுக்கு லைக், கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகிறார்கள்.