

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ஆர்யா தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' மற்றும் 'சில்வர் கிரைன் பிக்சர்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'ஹலோ பிரேமா' (Hello Prema) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் வண்ணமயமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தை இளம் இயக்குனர் நிகில் முரளி இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சுனு ஏ.வி மற்றும் ஜோதிஷ் எம் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். பிரபல இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான ஹலிதா ஷமீம் இப்படத்தின் கூடுதல் திரைக்கதையை அமைத்துள்ளார்.
ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்ய, சீனு நெப்போலியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குனராக ஏ.ஆர். மோகன் பணியாற்றியுள்ளார்.
வெளியாகியுள்ள போஸ்டர் மிகவும் வண்ணமயமாகவும், ஒரு ரோமண்டிக்-காமெடி பாணியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்யாவிற்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் இப்படத்தில் உள்ளனர்.
வைஷ்ணவி சைதன்யா மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ஒரு வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் மஞ்சள் நிறப் பேருந்து ஒன்று செல்வது போலவும், ஈரோடு நோக்கிய பயண வழிகாட்டி பலகை இருப்பதும் காட்டப்பட்டுள்ளது.
பின்னணியில் பறக்கும் புத்தகங்கள், பட்டாம்பூச்சிகள் மற்றும் காதல் சின்னங்கள் இடம்பெற்றிருப்பதால், இது ஒரு சுவாரசியமான பயணத்தை மையமாகக் கொண்ட காதல் கதையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவரும் வகையில் இந்த 'ஹலோ பிரேமா' திரைப்படம் வரும் டிசம்பர் 04 அன்று திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
திங்க் மியூசிக் நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியுள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.