ரொமான்டிக் கதைக்களத்தில் மீண்டும் ஆர்யா: 'Hello Kadhal' படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாகிறது!

நாளை வெளியாகும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Hello Kadhal Trailer
Published on: 
Summary

நடிகர் ஆர்யா, நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'ஹலோ காதல்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

டிரெய்லர் அப்டேட்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஆர்யா மீண்டும் முழுநீள ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆர்யாவை இரண்டு கதாநாயகிகளான நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கலகலப்பாகத் தூக்கிப் பிடித்திருக்கும் கலர்ஃபுல் போஸ்டரை வெளியிட்டு, நாளை மாலை 5 மணிக்குப் படத்தின் டிரெய்லர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தமிழில் 'ஹலோ காதல்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஹலோ பிரேமா' என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்களான 'கண்ணும் கண்ணும்' மற்றும் 'நிறைவே' ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நட்சத்திரப் பட்டாளம்

ஆர்யாவின் 40-வது திரைப்படமாக உருவாகியுள்ள இதில், நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா, முரளி சர்மா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். சுனு ஏ.வி. மற்றும் ஜோதிஷ் எம். கதை எழுத, இயக்குநர் ஹலிதா ஷமீம் கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.

தொழில்நுட்பக் குழு

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பினு நெப்போலியன் படத்தொகுப்புப் பணிகளையும், ஏ.ஆர். மோகன் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

நடிகர் ஆர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான The Show People மற்றும் சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ் (Silver Grain Pictures) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், நாளை வெளியாகும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

X