

அடர்ந்த வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கும், அசுர பலம் கொண்ட காட்டுயானைக்கும் இடையிலான வாழ்வாதாரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'அரிகொம்பன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், பிரபல சரிகம தமிழ் யூடியூப் தளத்தில் டிரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கேரளாவின் இடுக்கி மற்றும் சின்னக்கனல் பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய 'அரிக்கொம்பன்' என்ற காட்டுயானையின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள ஒரு பழங்குடியின கிராமத்திற்குள் வழிதவறி நுழையும் பிரம்மாண்ட காட்டுயானையால், அந்த மக்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத உயிர் பிழைப்புப் போராட்டமே படத்தின் மையக்கதையாக அமைத்திருக்கிறது. இயற்கை, அச்சம், ஆக்ஷன் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த டிரெய்லர் விவரிக்கிறது.
'எங்கேயும் எப்போதும்', 'சென்னையில் ஒரு நாள்' ஆகிய படங்களில் நடித்த மிதுன் மகேஸ்வரன் இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக 'சுமேஷ் & ரமேஷ்' மலையாளப் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை தேவிகா கிருஷ்ணன் இப்படத்தின் வாயிலாகத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், எம்.எஸ். பாஸ்கர், ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் டீசருக்கு நடிகர் சசிகுமார் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பச்சைமலை மற்றும் கொல்லிமலை ஆகிய மலைப்பகுதிகளில் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை மேஜிக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
'டிராபிக்', 'மிலி' ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான ஆர்.எஸ். அனிஷ்லால் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாக, சஜிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார். மேலும், பி. பிரவீன் படத்தொகுப்பையும், தினேஷ் மோகன் கலை இயக்கத்தையும், சுரேஷ் சண்டைப் பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
வனவிலங்கு - மனித மோதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'அரிகொம்பன்' திரைப்படம், வரும் டிசம்பர் 11-ம் தேதி தமிழ், மலையாளம் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.