

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படமாகும்.
ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்; மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இப்படம், தென் தமிழகத்தின் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், காதல், ஆசைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலின் பின்னணியில் உருவாகும் வாழ்க்கை மாற்றங்களைப் படம்பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வியலை விரிவாகவும் நெருக்கமாகவும் பதிவு செய்த படைப்பாக ‘ஹபீபி’ கவனம் பெற்றுள்ளது. வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் கதைக்களம், கலாசாரப் பதிவுகள் மற்றும் கதாபாத்திரங்களின் இயல்பான சித்தரிப்பு குறித்து விமர்சனங்கள் வெளியாகின.
திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்திற்குக் 125 வது நாள் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினரைப் பாராட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
கில்ட் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலும் இடம்பெற்றது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினரைப் பாராட்டினர்.
இந்நிகழ்வினில் நடிகர் கஸ்தூரி ராஜா பேசியதாவது.,
“‘ஹபீபி’ படத்துக்காகக் கிட்டத்தட்ட 40, 50 மேடைகளில் பங்கேற்றிருக்கிறோம். பல இடங்களுக்குக் காரிலும், ரயிலிலும், விமானத்திலும் பயணம் செய்திருக்கிறோம். மகிழ்ச்சியையும் வலியையும் அனுபவித்திருக்கிறோம்.
இன்றுவரை தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கஸ்தூரி ராஜா சிறப்பாக நடித்திருக்கிறார், என்று பலரும் பாராட்டுகிறார்கள். இவை அனைத்தையும் எங்களுக்குத் தாய்ப்பால் போல ஊட்டி, எங்களை வழிநடத்தியவர் இயக்குநர் மீரா கதிரவன்.
ஒரு இயக்குநரின் பார்வையும் வழிகாட்டுதலும் இல்லாமல் ஒரு படத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாகச் சினிமாவில் இருக்கிறேன்; 25 படங்களை இயக்கியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், ஒரு படத்தின் ஒவ்வொரு அசைவிலும் இயக்குநரின் பங்களிப்புதான் முக்கியமானது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. படப்பிடிப்பில் யாருக்கும் ஏற்றத்தாழ்வு காட்டப்படவில்லை; அனைவரும் சாதாரண மனிதர்களாகவே நடத்தப்பட்டோம். எனக்கு ஒரு விஷயத்தில் ஈகோ இருந்தது உண்மைதான்.
இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறேன்; உதவி இயக்குநராக இருந்து இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்திருக்கிறேன். பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
குடும்பத்தையும் நல்லபடியாகக் கவனித்துவிட்டோம்; இனி நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் மீரா கதிரவன் என் வீட்டுக்கு வந்தார். நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு நடிப்பதில் ஆர்வம் கிடையாது. திரையிலும் வாழ்க்கையிலும் என்னால் நடிக்க முடியாது; என் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே சொல்லிவிடுவேன். அதனால், ‘எனக்கு நடிக்கத் தெரியாது; என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்’ என்றுகூட அவரிடம் சொன்னேன்.
ஆனால், அவர் விடாமல் பேசினார். வீட்டில் உள்ளவர்களிடமும் ஆலோசித்தேன். பின்னர் அவர் கொடுத்த திரைக்கதையை இரண்டு, மூன்று நாட்கள் கழித்துத்தான் எடுத்துப் படித்தேன். படிக்கப் படிக்க, இந்த இயக்குநர் கதைக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது புரிந்தது. கதையில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்று தோன்றியது.
இஸ்லாமியர்களின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து எனக்கு முழுமையான புரிதல் இல்லாதபோதிலும், இந்தக் கதையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று அரைமனதுடன் ஒப்புக்கொண்டேன். ஆனால், அந்த முடிவு இவ்வளவு சிறப்பான அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றுவரை எங்களுக்குள் எந்தவிதமான உரசலும் ஏற்பட்டதில்லை.
இந்தப் படத்தை மீரா கதிரவனைத் தவிர வேறு யாருடைய இயக்கத்திலும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் அனைவரையும் சமமாக நடத்தும் விதத்தையும் நேரில் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மீண்டும் ‘கஸ்தூரி ராஜா’ என்ற பெயரையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.
இதற்கு முன்பு பலரும் என்னை ‘யூசுப் பாய்’ என்றுதான் அழைத்தார்கள். இப்போது மீண்டும் ‘கஸ்தூரி ராஜா சார்’ என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் நூறு சதவீதத்துக்கும் மேலாக இந்து மதத்தைச் சார்ந்தவன். ஆனால், இந்தப் படத்தில் நடித்ததற்காக என்னை வேறு ஒருவராக மாற்ற வேண்டும் என்று இயக்குநர் எந்தவிதத்திலும் வற்புறுத்தவில்லை.
கதையையும் கதாபாத்திரத்தையும் தெளிவாகப் புரியவைத்தால், தேவையான உணர்வுகள் இயல்பாகவே வந்துவிடும் என்பதை இந்தப் படம் உணர்த்தியது. இந்தப் படத்துக்காக உழைத்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என அனைவருக்கும் நன்றி.
இன்றைய சூழலில் ஒரு படத்தை உருவாக்குவதற்குப் பெரும் துணிச்சல் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட படங்களைத் தொடர்ந்து உருவாக்கவும், என்னை மீண்டும் மீண்டும் நடிக்க அழைக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்.
இந்தப் படத்தின் வெற்றிக்கும் பாராட்டுகளுக்கும் காரணமான இயக்குநர் மீரா கதிரவன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”. என தெரிவித்தார்.
இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது:
“‘ஹபீபி’ திரைப்படத்துக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாராட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து பல இடங்களில் இப்படத்துக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
இயக்குநர் ராம் சார், படம் வெளியான பிறகு குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று சொன்னார்.
அவர் எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை; இன்றுவரை உலகம் முழுவதும் இப்படத்துக்குப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன.
இதற்குக் காரணம், உங்கள் அனைவரின் அன்புதான். இதற்கு முன்பு எழுத்தாளர்கள், மகளிர் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சாதி, மதங்களைக் கடந்து செயல்படும் அமைப்புகள் இப்படத்தைப் பாராட்டியுள்ளன. இப்போது தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைப் பாராட்டுவது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்.
தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் என்னுடைய கதை வெறும் காகிதத்தில்தான் இருந்திருக்கும். தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து ‘ஹபீபி’ படத்தைப் பாராட்டுவது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வாக நான் பார்க்கிறேன்.
என்னுடைய முதல் படத்துக்குப் பிறகு, இரண்டாவது படத்தை நானே தயாரிக்கும் அளவுக்கு ஒரு சூழல் உருவானது. ஆனால் ஒரு படத்தைத் தயாரித்த பிறகுதான் தயாரிப்பாளரின் முக்கியத்துவம் முழுமையாகப் புரிந்தது.
தயாரிப்பாளர்கள் அளிக்கும் இந்த ஊக்கமும் அங்கீகாரமும் தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. ‘ஹபீபி’ படத்தில் நடித்த கஸ்தூரி ராஜா சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள்.
தனஸ்ரீ, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் முக்கியமான வாய்ப்பாக அமைந்தது. விஜயகுமார், ஜெயஸ்ரீ, மலர், ரிஸ்வானா, மஷூக் உள்ளிட்ட நடிகர்களும், உதய், மதி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
இந்தப் படத்துக்காக உழைத்த உதவி இயக்குநர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் சினிமாவுக்கு 110 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான மொழியும் வாழ்வியலும் இருக்கின்றன. கொங்கு மக்களின் வாழ்க்கை, கரிசல் நிலத்தின் வாழ்க்கை, வடசென்னையின் வாழ்க்கை எனப் பல்வேறு கதைகள் திரையில் வந்துள்ளன.
அதுபோல, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றினாலும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பேசும் திரைப்படம்தான் ‘ஹபீபி’. இத்தகைய கதையை இயக்குவதற்கு நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
இந்தப் படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியமானவர் வி.எஸ். முஹம்மத் அமீன். அவரை இந்தப் படத்தின் இயக்குநர், எழுத்தாளர் அல்லது தயாரிப்பாளர் என்று மட்டும் குறிப்பிட முடியாது; அவர் இந்தப் படத்தின் சகலகலா வல்லவர்.
இஸ்லாமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சுமார் 20 ஆண்டுகளாக இருந்தது. அந்தக் கனவைச் சாத்தியப்படுத்தியவர் அமீன்தான். அவர் இல்லையென்றால் ‘ஹபீபி’ இந்த மேடையை அடைந்திருக்காது.
நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களுக்குள் அந்த வாழ்க்கை அனுபவங்கள் குறித்த நெருக்கமும் புரிதலும் இருந்தன. இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.