விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் திமிரு என்கிறார்கள்- நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆதங்கம்

யாராவது ஒரு விஷயத்தை முன்வைத்து விவாதித்தால், அதில் பங்கேற்க எனக்கு ஆர்வம் உண்டு. விமர்சனங்களைக் கேட்பதிலும் எனக்கு விருப்பம் இருக்கிறது.
அனுபமா பரமேஸ்வரன்
Published on: 
Summary

சமூக வலைதள விமர்சனங்கள் ஆரோக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் என நடிகை அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார். விமர்சனங்களுக்கு பதிலளிக்காவிட்டால் திமிரு என்கிறார்கள், பதிலளித்தால் வேலையில்லையா என கேட்கிறார்கள் என்றார்.

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் என்ன செய்தாலும் அதைக் கவனித்துக் கருத்து சொல்ல ஒரு கூட்டம் காத்திருக்கிறது. விமர்சனங்களுக்குப் பதில் அளித்தாலும் பிரச்சனை; பதில் அளிக்காவிட்டாலும் பிரச்சனை! இந்தச் சூழலில், சமூக வலைதள விமர்சனங்கள் மற்றும் தனது தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“ஒரு படத்தைப் பார்த்த பிறகு அது பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதையும், படத்தில் சில விஷயங்கள் ஏன் அப்படி உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்வையாளர்கள் விவாதிக்க வேண்டும். திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள் அவசியம். ஆனால், அவை ஆரோக்கியமான விவாதங்களாக இருக்க வேண்டும்.

உடன்பாடில்லை

சிலர் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவோ அல்லது பணம் பெற்றுக்கொண்டோ ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அதே நேரத்தில், யாராவது ஒரு விஷயத்தை முன்வைத்து விவாதித்தால், அதில் பங்கேற்க எனக்கு ஆர்வம் உண்டு. விமர்சனங்களைக் கேட்பதிலும் எனக்கு விருப்பம் இருக்கிறது. இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் இருந்தால்தான் நம்மால் வளர முடியும்.

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். பதிலளிக்காவிட்டால் திமிர் என்கிறார்கள். பதிலளித்தாலோ, ‘வேறு வேலையே இல்லையா?’ என்று கேட்கிறார்கள். இந்த அணுகுமுறையில் எனக்கு உடன்பாடில்லை.

நானும் சமூக வலைதளங்களைப் பார்க்கிறேன். எனக்குப் பிடித்த பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கிறேன்; கருத்துகளைப் பதிவிடுகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

அன்பு, மகிழ்ச்சி, நன்றியுணர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? எனக்குப் பிடித்த ஒரு பதிவில் கருத்துத் தெரிவிக்க மற்றவர்களிடம் நான் ஏன் அனுமதி கேட்க வேண்டும்? எனக்கு ஓய்வு நேரம் இருந்தாலும், அது இல்லாததுபோல நான் ஏன் நடித்துக்கொள்ள வேண்டும்?” என்று அனுபமா பரமேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com