

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கலாநிதி மாறன் குடும்பத்தினர் இணைந்து, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் திருமணம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற இடத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட வரவேற்பு விழா சென்னையில் வரும் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கலாநிதி மாறன் குடும்பத்தினர் இணைந்து, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளனர். விஜயின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத்துடன் முதல்வர் விஜய்க்கு நீண்டகாலமாக நல்லதொரு நட்பு உள்ளது.
குறிப்பாக, நடிகர் விஜயின் தீவிர ரசிகரான அனிருத், அவரது நடிப்பில் வெளியான 'கத்தி', 'மாஸ்டர்', 'லியோ', 'பீஸ்ட்' மற்றும் அவரது கடைசி படமான 'ஜன நாயகன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக 'கத்தி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பரிசாக இளம் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முதல்வர் விஜய் பியானோ ஒன்றைப் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திருமண அழைப்பிதழை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.