

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாக வைத்து 'கிளாடியேட்டர்ஸ்' எனும் பிரம்மாண்ட ஆவணப்படம் தயாராகி வருகிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தை அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் மற்றும் ஷாலினி அஜித்குமாரின் கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றன. அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தனது 'இம்மார்ட்டல்' திரைப்பட விளம்பர நிகழ்வின் போது ஜி.வி.பிரகாஷ் 'கிளாடியேட்டர்ஸ்' அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நள்ளிரவு 1 மணியளவில் போடிம் செயலி வழியாக அஜித்திடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்தார்.
படத்தின் டிரெய்லர் மற்றும் பின்னணி இசையைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த அஜித், ஜி.வி.பிரகாஷின் உழைப்பைப் பாராட்டி நன்றி கூறியதுடன் "உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்" என்றும் உறுதியளித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகள் அன்றைய இரவு முழுவதும் தன்னை தூங்கவிடாமல் உற்சாகப்படுத்தியதாக ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
இப்படம் வெறும் ரேசிங் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்லாமல், அஜித்தின் தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் அவரது சர்வதேச ரேசிங் கனவை வெளிப்படுத்தும் ஆவணப் பதிவாக இருக்கும். அஜித் தனது சொந்த முயற்சியிலும் முதலீட்டிலும் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதால், இது காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு முக்கியப் படைப்பாக அமையும் என இசையமைப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச பந்தய களங்களில் அஜித்தும் அவரது அணியினரும் சந்தித்த சவால்களைத் தொகுத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லருக்கு 'UA 13+' தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக அஜித்தின் பிறந்தநாளையொட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இத்திரைப்படம், தற்போது திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.