25 ஆண்டுகளுக்குப் பின் பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள 'மூன்வாக்' படம் தீபாவளி 2026-ல் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் 5 பாடல்களை பாடி நடித்துள்ளார், யோகி பாபு 16 வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் ‘காதலன்’, ‘மின்சார கனவு’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து நடனப்புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருபெரும் ஆளுமைகள் மீண்டும் இணையும் 'மூன்வாக்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மூன்வாக்' இத்திரைப்படம் 2026 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் ஒரு முழுமையான நகைச்சுவை, நடனம் மற்றும் குடும்பக் கொண்டாட்டப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல ஊடக நிறுவனமான பிகைண்ட்வுட்ஸ் -ன் நிறுவனரும் சிஇஓ-வுமான மனோஜ் என்.எஸ் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.
இந்தத் திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதோடு மட்டுமின்றி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
அதில் குறைவான நேரத்தில் மட்டும் நடித்திருப்பதாக சமீபத்திய வீடியோ ஒன்றில் அவரே கூறியிருந்தார்.
இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானே சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட திருவிழா அல்லது கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான 'ஏது', 'மக்கரீனா' மற்றும் 'டிங்கா' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பிரபுதேவா மற்றும் ரஹ்மான் இணைந்து தோன்றும் அடுத்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் நகைச்சுவைக்கு வலு சேர்க்கும் வகையில் நடிகர் யோகி பாபு ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். இந்த படத்தில் அவர் 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதுகுறித்து ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, "இயக்குநர் மனோஜ் கதை சொல்லும் போது எனக்கு ஒரே ஒரு கதாபாத்திரம் தான் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஸ்கிரிப்டில் எனக்கு 16 வெவ்வேறு வேடங்கள் இருப்பதை அறிந்து வியப்படைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா, யோகி பாபு ஆகியோருடன் அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்து நடித்துள்ளனர்.
மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் ஏலக் ஆகியோர் இணைந்து பிகைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அனூப் வி ஷைலஜா ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார்.
'மூன்வாக்' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
2026 தீபாவளி ரேஸில் சூர்யாவின் 47-வது திரைப்படம் மற்றும் சிலம்பரசனின் 'அரசன்' ஆகிய படங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்த ஒரே திரைப்படம் 'மூன்வாக்' மட்டுமே என்றும் தெரியவந்துள்ளது.