என்னிடமே மோசடியில் ஈடுபட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது- நடிகை ராதா

நானும் எனது குடும்பத்தினரும் போரூரில் 11 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தொழில் நிறுவனம் நடத்தி வருகிறோம்.
நடிகை ராதா
நடிகை ராதா
Published on
Summary

நான் மிகவும் நம்பிய எனது சகோதரியும், சகோதரரும் இப்படி என்னிடமே மோசடியில் ஈடுபட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாக நடிகை ராதா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் 1980 கால கட்டங்களில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் இருவரும் சகோதரிகள். நடிகை ராதா சென்னை போரூர் ஆர்.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது சகோதரியான நடிகை அம்பிகா மீது நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனரிடம் காசோலை மோசடி செய்ததாக பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

பின்னர் வெளியே வந்த நடிகை ராதா நிருபர்களிடம் கூறியதாவது:-

11 ஆண்டுகள்

நானும் எனது குடும்பத்தினரும் போரூரில் 11 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தொழில் நிறுவனம் நடத்தி வருகிறோம். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவும், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காகவும் நான் எனது வீட்டில் காசோலையை கையெழுத்திட்டு வைத்திருப்பது வழக்கம். அதில் பெயர் மற்றும் தொகை நிரப்பாமல் இருக்கும்.

இந்த நிலையில் எனது சகோதரி அம்பிகா அந்த காசோலைகளை எடுத்து அதில் அவரது பெயரையும், தொகையையும் நிரப்பி அவரது கணக்கில் வங்கியில் செலுத்தி உள்ளார். மொத்தம் 5 காசோலைகள் மூலம் அவர் ரூ.46 கோடி பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு மோசடியாக செலுத்தி உள்ளார்.

இது தொடர்பாக கடந்த 16-ந்தேதி எனது செல்போனுக்கு வங்கியில் இருந்து குறுந்தகவல் வந்தது. இதை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனே வங்கிக்கு தகவல் தெரிவித்து பணம் பரிமாற்றம் செய்வதை நிறுத்துமாறு கூறிவிட்டேன். இதனால் பணம் அவரது வங்கி கணக்கிற்கு செல்லவில்லை.

வருத்தம் அளிக்கிறது

ஆனாலும் இந்த மோசடி தொடர்பாக புகார் தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மோசடிக்கு எனது தம்பி மல்லிகார்ஜுனாவும் உடந்தையாக இருப்பதாக சந்தேகப்படுகிறேன்.

நான் மிகவும் நம்பிய எனது சகோதரியும், சகோதரரும் இப்படி என்னிடமே மோசடியில் ஈடுபட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நடிகை ராதாவின் மற்றொரு சகோதரி மற்றும் வக்கீல் பால்கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com