

தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் பல்வேறு நன்மைகளை வழங்கி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரபலங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தவறாகச் சித்தரிக்கும் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், தனது முகத்தையும் உருவத்தையும் அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு பிரபல நடிகை நேகா சர்மா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் தனது உருவத்தைத் தவறான முறையில் சித்தரித்துப் படங்களும் வீடியோக்களும் உருவாக்கப்படுவதற்கு நடிகை நேகா சர்மா தனது சமூக வலைதளப் பதிவில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "எனது அனுமதியின்றி எனது முகத்தையோ உருவத்தையோ பயன்படுத்திச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை உடனடியாக உருவாக்குவதையும் பரப்புவதையும் நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் குறித்துப் பேசிய அவர், "இதுபோன்ற போலியான ஆபாசப் படங்களை உருவாக்குவதற்கு நான் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. இணையத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள என் சம்பந்தப்பட்ட அனைத்து போலிப் படங்களையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும். எனது முகத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது உருவத்தைத் தவறாகச் சித்தரிப்பவர்களுக்கு எதிராக மட்டுமின்றி, அத்தகைய போலிப் படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் லைக் செய்பவர்கள், பதிவிடுபவர்கள் மற்றும் பிறருக்குப் பகிர்ந்து பரப்புபவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேகா சர்மா எச்சரித்துள்ளார்.
சமீபகாலமாகப் பிரபல நடிகைகளின் முகங்களை டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக நடிகை நேகா சர்மா எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு திரைத்துறையிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.