

தமிழில் 90களின் காலகட்டத்தில் தான் சர்ச்சையான விஷயங்களை தவிர்த்ததன் மூலம், ஆரம்ப காலத்தில் வெற்றி பெற்றதாக நடிகை மதுபாலா மாலைமலர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான அழகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக மதுபாலா அறிமுகமானார்.
சென்னையில் பிறந்த இவர், சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம், இவருக்கு தமிழ்நாடு சிறப்பு விருதை பெற்று தந்தது.
இதையடுத்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
இந்த நிலையில் மாலைமலர் செய்தி நிறுவனத்திற்கு நடிகை மதுபாலா அளித்த நேர்காணலில், தனது சினிமா அனுபவங்களை குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “90களின் காலகட்டத்தில் நான் வெற்றி பெற்றதற்கு, சர்ச்சையில் சிக்காமல் இருந்ததே காரணம்.
மேலும் இந்த விஷயங்களை நான் எனது அக்கா (பெரியம்மா மகள்) ஹேம மாலினியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவர் தான், சினிமாவில் நிகழும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பொதுவெளியில் பகிர வேண்டாம் என கூறினார்.
நான் எனது 30வது வயதில் திருமணம் செய்துகொண்டேன், எனது மகளுக்கு சினிமா மீது அதிகளவில் ஆர்வம் இல்லாததால், அவர் லண்டனில் வர்த்தகம் தொடர்பாக படித்தார்.
நான் சினிமாவில் நுழைவது என்பது கனவு போல் இருந்தது; அது திட்டமிட்டு நடைபெறவில்லை.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் உடனான எனது சினிமா அனுவம் மிகவும் ஆழமானது.
எனக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர்களை பிடிக்கும்; நான் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினேன்.
இதையடுத்து விஜய் என்னை தொடர்பு கொண்டு, தனது நன்றியை தெரிவித்தார். தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்; புதிய வாய்ப்புகள் கிடைத்தால் அதனை தவறாமல் பயன்படுத்தி கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.