“என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்!” – Plastic Surgery விமர்சனங்களுக்கு நடிகை ஜாஸ்மின் பாசின் ஆவேசப் பதிலடி!

என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் நான் அழகாகவும், கச்சிதமாகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
Jasmin Bhasin
Published on: 
Summary

இந்தியத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜாஸ்மின் பாசின். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அவர் கலந்துகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், ஜாஸ்மின் பாசின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் விமர்சிக்கத் தொடங்கினர்.

பிளாஸ்டிக் சர்ஜரி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

தனது தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற விமர்சனங்களுக்கு நடிகை ஜாஸ்மின் பாசின் தற்போது காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நான் தொடர்ச்சியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்குப் போதிய தூக்கம்கூட கிடைப்பதில்லை. மேலும், பல்வேறு மேக்கப் கலைஞர்களுடன் பணியாற்றுகிறேன். எனக்கு இருக்கும் சைனஸ் பிரச்சினையாலும் முகத்தில் வீக்கம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, தற்போது எனது உடல் எடையும் சற்று அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ள எனக்கு நேரம்கூட இல்லை. நானும் ரத்தம், சதை, தசை, எலும்புகளால் ஆன ஒரு சாதாரண மனிதப் பிறவிதான்.

என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் நான் அழகாகவும், கச்சிதமாகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

என்னுடைய தோற்றத்தைப் பற்றி விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, தயவுசெய்து என்னை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு

உடல்நலக் குறைபாடு மற்றும் பணிச்சுமையால் ஏற்பட்ட இயல்பான மாற்றத்தைக் கேலி செய்தவர்களுக்கு ஜாஸ்மின் பாசின் கொடுத்த இந்தப் பதிலடி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பலரும் அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

X