

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட விழா, இயக்குநர் பாலாஜியின் சொந்த ஊரான திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழா சிறிய முதலீட்டுத் திரைப்படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் கதாநாயகன் நடிகர் சித்து (Sidhu), தனது ஆரம்பகால சினிமாப் போராட்டம் மற்றும் சென்னை சாலிகிராமத்தில் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் உதவி இயக்குநர்கள், நடிகர்களின் தற்போதைய அவல நிலை குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார்.
தனது திரைப்பயணம் குறித்துப் பேசிய நடிகர் சித்து, "எனது வாழ்க்கை ஒரு பெரிய போராட்டப் பயணமாகத்தான் இருந்துள்ளது. நான் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்து, சாலிகிராமத்தில் ஒரு பத்துக்கு பத்து அறையில் தங்கித் தான் எனது முயற்சிகளைத் தொடங்கினேன். எனது கடின உழைப்பைப் பார்த்துவிட்டுத் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்கள்.
இங்கு மேடையில் பேசியவர்கள் நான் 'ராஜா ராணி' படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்ததைக் குறிப்பிட்டார்கள்.
அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் முதல் கதாநாயகனாக நடித்த நடிகர் 'வல்லினம்' படத்திலும் நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகத்தான் திரையில் வந்து போயிருப்பேன்.
ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கிறோமே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். கேமரா என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். கேமரா யார் முன்னாடி வந்து நின்றாலும் அவர்களை அழகாகக் காட்டும். ஆனால், அப்படி முன்னாடி வந்து நிற்பதற்கு நமக்கான சரியான நேரமும் வாய்ப்பும் வர வேண்டும்,சினிமாவை நம்புங்கள் அதற்கான உழைப்பையும் கொடுங்கள் அது நம்மை ஒரு போதும் கைவிடாது." என்றார்.
இன்றும் சென்னை சாலிகிராமத்தில் நிலவி வரும் எதார்த்த சூழல் குறித்து அவர் பேசுகையில்:
"இன்றும் சாலிகிராமத்தில் தனக்கான ஒரு சினிமா வாய்ப்புக்காக அல்லும் பகலும் அலைந்து கொண்டிருக்கும் பலரை நான் தினமும் பார்த்து வருகிறேன்.
சினிமாவில் ஏதாவது ஒரு பெரிய சாதனையைச் செய்துவிட்டு, ஒரு அடையாளத்தைப் பெற்ற பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று 45 வயதாகியும் கூட திருமணம் செய்யாமல் பலர் இருக்கிறார்கள்.
மனதுக்குள் அவ்வளவு வலிகளைச் சுமந்து கொண்டு திரியும் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் மிகுந்த வருத்தமாக இருக்கும்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நெல்லையைச் சேர்ந்த இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 18-ந் தேதி வெளியான 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தில் சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், சாரண், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு மற்றும் கோபால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.