

நடிகர் சரவணன், தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளார். மாதம் ரூ.1.5 லட்சம் கேட்கிறார் என அவர் கூறியதுடன், தனது வாழ்க்கையில் நியாயம் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் சட்டமும் நீதியும் 2. இந்தத் தொடர் வருகிற 23-ந் தேதி ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது. தொடரில் சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி, வினோத் உள்பட பலர் நடித்துள்ளனர். 18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சரவணன் பேசியதாவது:-
முதல் சீசனைப் போல் இரண்டாவது சீசனும் நல்ல வரவேற்பு பெரும் என நான் நம்புகிறேன். பாலாஜி இயக்குகிறார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். நல்ல படத்தில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு கொடுப்பினை. அது இறைவன் செயல்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சரவணனிடம் பொதுவாக சினிமாவில் போலீசாரையோ வழக்கறிஞர்களையோ பாசிட்டிவாக காண்பிக்க மாட்டார்கள். இந்தத் தொடரில் பாசிட்டிவாக காண்பித்துள்ளனர்.
உங்களது தனிப்பட்ட முறையில் போலீசாரும், வழக்கறிஞர்களும் பாசிட்டிவாக இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்து சரவணன் கூறும்போது, “என்னோட வாழ்க்கையிலேயே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. நான் என் பொண்டாட்டியை எதிர்த்து வழக்கு போட்டு ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளேன்.
மாதம் ரூ.1.5 லட்சம் கேட்கிறாள் என் பொண்டாட்டி. நானே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இதில் ரூ.1½ லட்சம் கொடுத்து விட்டு நான் எங்கே போவது?”
இவ்வாறு அவர் கூறினார்.