காந்தாரா படத்தைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.
Aadhi Rudra Team
Published on: 
Summary

உலகளவில் மெகா ஹிட்டான 'காந்தாரா' திரைப்படத்தைத் தொடர்ந்து, ஆன்மிகம் மற்றும் தெய்வீக மர்மக் கதைக்களத்தில் உருவாகும் புதிய பிரம்மாண்ட பான்-இந்தியத் திரைப்படத்திற்கு ‘ஆதி ருத்ரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகர் ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

‘டண்டுபால்யா’ மற்றும் சமீபத்திய பிளாக்பஸ்டர் ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் பிரசாந்த் G ருத்ரப்பா, தனது 'திரிசூல எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்' நிறுவனத்தின் 3-வது தயாரிப்பாக இப்படத்தைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

1960-90 காலகட்டத்து ஆன்மிக மர்மம்!

பிரபல கன்னடத் திரைப்பட இயக்குனர் நவரசன் இப்படத்தைக் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். 1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில், கிராமப்புற மக்களின் ஆன்மிக நம்பிக்கை மற்றும் அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் தெய்வீக மர்மங்களை மையமாகக் கொண்டு இதன் விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மர்மம், அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

'காந்தாரா' இசையமைப்பாளரின் அசுரக் கூட்டணி

இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அதன் தொழில்நுட்பக் குழு அமைந்துள்ளது.

'காந்தாரா', 'விருபாக்ஷா', 'மங்களவாரம்' மற்றும் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மகாராஜா' படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த பி. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவரது பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி இப்படத்தின் காட்சிகளைத் தனது கேமராவில் படம்பிடிக்கிறார்.

ஜனவரியில் தொடங்கும் படப்பிடிப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியத் திரைப்படமாக நேரடியாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.

படத்தில் நடிக்கும் இதர முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. கதையின் பிரதான திருப்பங்களை ரகசியமாக வைத்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com