

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் '13' திகில் படம், உண்மை சம்பவங்களுடன் அமானுஷ்யங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கவுதம் மேனன், கதிர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், கதாநாயகனாகவும் படங்கள் நடித்து வருகிறார். 2015-ம் ஆண்டு 'டார்லிங்' என்ற திகில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் ஒரு திகில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அதன்படி, மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கே.விவேக் இயக்கத்தில் உருவாகி வரும் '13' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பவ்யாதிரிகா நடிக்கிறார். முன்னணி இயக்குனர் கவுதம் மேனன், கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இருளுக்குள் மறைந்திருக்கும் உண்மை என்ன?, 13 என்ற எண்ணுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே திகிலூட்டும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. உண்மை சம்பவங்களுடன், கற்பனையும், அமானுஷ்யங்களும் கலந்து ரசிகர்களை திகிலில் உறைய வைக்கும் வகையில் இப்படம் தயாராகி இருக்கிறது. மனித நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ரிலீசுக்கு முந்தையப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.