இழந்தவர்களை மீட்டெடுக்கும் போராட்டம் - அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்

பல சூப்பர் ஹீரோக்களை கொண்டு பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் விமர்சனம். #Avengers #AvengersEndgame
இழந்தவர்களை மீட்டெடுக்கும் போராட்டம் - அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்
Published on

திரை உலக ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், அவெஞ்சர்ஸின் இறுதி பாகம் ஆகும்.

கடந்த பாகத்தில் அனைத்து நவரத்தின கற்களை கைப்பற்றிய தானோஸ், தனது சக்தியின் மூலம் உலகில் உள்ள பாதி மக்களை அழித்து விடுகிறார். இது அவெஞ்சர்ஸ் குடும்பங்களையும் பாதிக்கிறது. 

இதன் தொடர்ச்சியாக இப்படம் ஆரம்பிக்கிறது. அவெஞ்சர்ஸ் அனைவரும் சோகத்தில் இருக்க கேப்டன் மார்வல் விண்வெளியில் இருந்து ஐயர்ன் மேனை பூமிக்கு அழைத்து வருகிறார். உடல்நிலை மோசமாக இருக்கும் இவருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

தானோஸிடம் இருக்கும் நவரத்தின கற்களை வைத்து இழந்த அனைவரையும் மீட்க நினைக்கிறார்கள் அவெஞ்சர்ஸ். ஒரு வழியாக தானோஸ் மகள் மூலம் தானோஸ் இருக்கும் கிரகத்தை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், தானோஸிடம் கற்கள் இல்லாததை கண்டு விசாரிக்கும் போது, கற்களை அழித்து விட்டதாக தானோஸ் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். 

நவரத்தின கற்கள் இல்லாமல் அவெஞ்சர்ஸ் இழந்தவர்களை எப்படி மீட்டார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. 

பல பாகங்களை விட இறுதி பாகத்தை பார்க்க உலக திரை ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்தி செய்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், பிரம்மாண்டம் என்று ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல தேவையில்லை. அனைவரும் கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, கேப்டன் மார்வல், தோர், ஹல்க் உள்ளிட்டவர்களை திரையில் பார்க்கும் போது அனல் பறக்கிறது. இந்த முறை தோர் காமெடியில் கலக்கி இருக்கிறார். 

சின்ன சின்ன விஷயங்கள் கூட பிரம்மாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்கள். இறுதி காட்சி பிரம்மாண்டத்தின் உச்சம். அதுவும் 3-டியில் பார்க்கும் போது புது அனுபவத்தை கொடுக்கிறது. தமிழில் பார்க்கும் போது விஜய் சேதுபதியின் பின்னணி குரல் படத்திற்கு மைனசாக அமைந்திருக்கிறது. விஜய் சேதுபதியை தவறு சொல்லவில்லை. ஆனால், ஐயன்மேனுக்கு விஜய் சேதுபதியின் பின்னணி குரல் சூட்டாகவில்லை. 

மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பிரம்மாண்டத்தின் உச்சம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com