

கவாசகி நிறுவனம் தனது Z300 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய Z300 பைக் விலை ரூ. 3.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் நின்ஜா 300 ஸ்போர்ட்ஸ் பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், அதன் பெரும்பாலான பாகங்களையும் பகிர்ந்து கொள்கிறது. தற்போது, கவாசகி Z வரிசையில் Z300 மிகவும் மலிவான என்ட்ரி லெவல் மாடலாக விளங்குகிறது.
இந்த வடிவமைப்பு, அதிக திறன் கொண்ட Z சீரிசின் சுகோமி வடிவமைப்பில் இருந்து உத்வேகம் பெற்று, ஆக்ரோஷமான Z-வடிவ ஹெட்லேம்ப் பகுதியை கொண்டுள்ளது. ஹெட்லேம்ப்-இன் இருபுறமும் உள்ள பிரம்மாண்டமான டேங்க் எக்ஸ்டென்ஷன்கள், ஒட்டுமொத்த ஆக்ரோஷமான தோற்றத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன.
புதிய கவாசகி மோட்டார்சைக்கிள் கேண்டி லைம் கிரீன் / எபோனி மற்றும் மெட்டாலிக் கார்பன் கிரே / எபோனி ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் நின்ஜா 300 மாடலில் உள்ள அதே 296சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய Z300-இல், இந்த யூனிட் 39.4BHP பவர் மற்றும் 26.3NM டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜின், ஸ்லிப்-அண்ட்-அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிளில் கவாசாகியின் டூயல்-த்ராட்டில் வால்வு தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது.
இந்த பைக்கில் 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் யூனி-டிராக் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் இரு முனைகளிலும் 17-இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பிரேக்கிங்கிற்கு, முன்புறத்தில் 290mm மற்றும் பின்புறத்தில் 220mm பெட்டல் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த பைக்கில் டூயல்-சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இது 140mm கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகிறது. மேலும் இந்த பைக்கின் மொத்த எடை 175 கிலோ ஆகும்.