

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களின் விலையை இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இதில் பல்சர் சீரிஸ், அவெஞ்சர் சீரிஸ், டாமினர் 400 என அனைத்து மாடல்களும் அடங்கும்.
புதிய விலை மாற்றத்தின் படி பஜாஜ் பல்சர் சீரிஸ் விலை ரூ. 4000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் கிளாசிக் 150, பல்சர் 150 நியோன், 160 என்.எஸ்., 200 என்.எஸ். மற்றும் 220 எஃப் உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்படுகிறது. இதேபோன்று பஜாஜ் அவெஞ்சர் சீரிஸ் விலை ரூ. 1000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அவெஞ்சர் சீரிசில் ஸ்டிரீட் 160, குரூஸ் மற்றும் ஸ்டிரீட் 220 மாடல்கள் அடங்கும்.
பஜாஜ் ஃபிளாக்ஷிப் மாடலான டாமினர் 400 விலையை ரூ. 10,000 வரை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பஜாஜ் டாமினர் விலை இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் புதிய தலைமுறை டாமினர் 400 ரூ. 1.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இதன் விலை ரூ. 6000 வரை அதிகரிக்கப்பட்டது. தற்சமயம் பஜாஜ் டாமினர் 400 புதிய விலை ரூ. 1.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக மாறியிருக்கிறது.
விலை மாற்றம் தவிர, மோட்டார்சைக்கிள்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய விலை மாற்றம் நாடு முழுக்க உடனடியாக அமலாகியுள்ளது. சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்த புதிய என்ட்ரி லெவல் பல்சர் 125 மாடலின் விலை மட்டும் மாற்றப்படாமல் இருக்கிறது.