

இளமை பொலிவு நிறைந்த கன்னி ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் 11ம்மிடமான லாப ஸ்தானத்திற்குள் கேது பகவானும் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம் , கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
ஐந்தாம் பாவக பலன்களான புகழ், கீர்த்தி,பதவி, ஆழ்ந்த சிந்தனை, ஞானம் , குழந்தை பாக்கியம் , பணம் சம்பாதிக்கு வழிகள், புத்தி சாதுர்யம், பூர்வீக சொத்து , காதல் இவை அனைத்தையும் ஐந்தாமிட ராகு இந்த ஒன்றரை வருடத்தில் அவரவரின் வயது மற்றும் தசாபுத்தி அடிப்படையில் வழங்குவார். சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற பணிகள் லாபகரமாக நடைபெறும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.குறுக்கு சிந்தனையை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிப்பீர்கள். ஒரு சிலருக்கு திடீர் பக்தி நாட்டம் வரும் . பக்திக்கு பின் பெரிய பதவி ஆசை வரலாம். விரும்பிய பதவிகள் கிடைக்கும். ஆனால் பதவி எப்பொழுது பறிபோகுமோ? என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகளை செய்து பெயருக்கு கலங்கம் உருவாகும். சில இளவயது பிள்ளைகளுக்கு காதல் உணர்வு மிகுதியாகும். இது போன்ற காலகட்டத்தில் எது சரி? எது தவறு? என்று பகுத்தாயும் தன்மை மற்றும் நிதானம் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
கன்னி ராசிக்கு 3,8ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் கண்டகச் சனியன் காலத்தில் பண மோசடி மிகுதியாக இருக்கும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும். சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து , கேரண்டி கையெழுத்து போடுவது குற்றவாளி கூண்டில் நிறுத்தும். சிலருக்கு இது போன்ற பிரச்சனைகளில் இருந்து மானம் காக்க வீடு, வாகனம், நிலபுலன் ,நகை அனைத்தையும் இழந்து ஜாமீன் தொகையை கட்ட நேரும் என்பதால் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். உடல் உபாதைகள் அதிகமாக இருக்கும்.
கன்னி ராசிக்கு லாபாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் என்பதால் பகைவர்களிடம் கூட அன்பாக பேசி காரியத்தை சாதிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.ஜனன கால ஜாதகத்தில் தசா - புத்தி சாதகமாக இருந்தால் வாழ்வில் செட்டில் ஆகும் மார்க்கத்தை ராகு/கேதுக்கள் கன்னி ராசியினருக்கு காட்டுவார்கள். சுய ஜாதகத்தில் 7,8ம் பாவகங்களில் பிரச்சனை இருந்து திருமணத் தடை இருந்தால் அதற்கு உரிய பரிகார வழிபாட்டு முறையை செய்து பின் திருமணத்தை நடத்த வேண்டும்.
கன்னி ராசிக்கு விரயாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் குடும்ப உறவுகளுக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.அதற்கான வைத்திய செலவு கட்டுக்கடங்காமல் பொருள் கடன் அதிகமாகும். பெற்றோரை யார் பராமரிப்பது என்ற உடன் பிறந்தவர்களின் கருத்து வேறுபாட்டால் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றாமல் பிறவிக் கடனை அதிகரிப்பீர்கள். பூர்வீக ஊருக்கு சென்று வரப் போட்ட திட்டத்தில் தடை ஏற்படும். சிலர் உடல் உபாதையால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற நேரும். பரம்பரை நோயான சுகர், பிரஷர், பிபி உங்களை தாக்க தயாராகும் காலம்.
உங்களின் மனதடுமாற்றம் நீங்கி விவேகத்துடன் கூடிய வேகம், நிதானம்,தைரியம் மற்றும் தெம்பு உங்களுக்குள் குடிபுகும். எண்ணங்கள் கனவுகள் திட்டங்களை நிறைவு செய்யக்கூடிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். உங்களை ஆட்டுவித்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?நம்பிக்கையானவர்களை எப்படி தேர்வு செய்வது? யாரை நம்புவது? தார்மீக முறையில் சம்பாதிப்பது எப்படி போன்ற அனைத்து ஞானத்தையும் பதினொன்றாமிட கேது வழங்கப் போகிறார். கேது தான் நின்ற பாவக பலனை சுருக்குவார். தர்மகிரகமான கேது சட்டத்திற்கு உட்பட்டு எல்லோரும் அங்கீகரிக்கும் விதத்தில் பொருள் தருவார். அதிர்ஷ்டம் உழைப்பின் மூலம் முறையான, நேர்மையான வழியில் கதவை தட்டும். மொத்தத்தில் அளவான நியாயமான ஆசைக்கு கேது உதவுவார். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத உத்தியோக இடமாற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் உங்களை வந்து பார் என்று வம்புக்கு இழுக்கும். பிறரை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது.எனவே வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வேலையை தக்க வைக்க முடியும்.
கன்னி ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்காது.எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தலை தூக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு குற்றச்சாட்டுகள் மன வேதனையை தரும்.மறைமுக எதிர்ப்புகளும் , சூழ்ச்சிகளும் போட்டிகளும் அதிகரிக்கும்.உடன் பிறந்தவர்களின் நயவஞ்சக செயலால் சமுதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்படும். மன வேதனை மிகுதியால் ஒரு சிலர் வேறு மதத்தை நாடுவார்கள் அல்லது தலைமறைவாகுவார்கள். ஒரு சிலர் வெளிநாடு சென்று அங்கேயே தங்கிவிடுவார்கள்.கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது.
கன்னி ராசிக்கு 5, 6ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் வேலைப் பளு அதிகமாக இருக்கும். இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும். உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். குழந்தைகளுக்காக கடன்பட நேரும்.காதல் பிரச்சினைகள் வம்பு வழக்கை தேடித்தரும்.பங்கு வர்த்தகம் முன்னுக்கு பின் முரணான பலனை ஏற்படுத்தும். இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். வீண் அலைச்சலை ஏற்படுத்தும் பயணங்கள் செய்ய நேரும்.
கன்னி ராசிக்கு 4, 7ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் ஆடு, மாடு, கோழி, பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் உண்டாகும். நிலுவையில் இருக்கும் வாடகை வருமானம் வந்து சேரும். இதுநாள் வரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்கள். வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் இல்லாதவர்களுக்கு சொத்து சேரலாம். பருவ வயது எட்டியும் பருவமடையாத பெண் குழந்தைகள் பருவ மடைவார்கள்.அதிக பொருள் ஈட்டும் ஆசையற்றவர்களை யும் , நியாயமாக கடுமையாக உழைப்பவர்களுக்கும் கேது துணை நிற்பார். சிலர் தாயார் அல்லது வாழ்க்கை துணையுடன் இணைந்து கூட்டு தொழில் துவங்கலாம்.
விஷ்ணு ஆலயங்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி தந்து பராமரிப்பு இல்லாத கோவில் பணிக்கு உதவ கர்ம வினை நீங்கும்.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை உண்டாகும்.