விருச்சிகம்- 2026 புரட்டாசி மாத ராசிபலன்

நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம் இது.
Viruchigam rasipalan
Published on

விருச்சிக ராசி நேயர்களே!

பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும் அதன் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். மனக்குழப்பம் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். மாதத்தின் முதல் வாரத்திலேயே செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு வந்து உச்சம்பெற்ற குருவோடு இணைந்து 'குரு - மங்கள யோகம்' உருவாகிறது. எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம் இது.

கடக-செவ்வாய்

புரட்டாசி மாதம் 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதி நீச்சம் பெற்றாலும் உச்சம் பெற்ற குருவோடு இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. எனவே தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வெற்றி பெற்றவர்களின் வரிசையில் முதலில் நிற் பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு பெருமை சேர்க்கும். கல்யாணக் கனவு நனவாகும். கடமையைச் செவ்வனே செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணமாக இருக்கும். வாகன யோகம் உண்டு. பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். விலகிய சொந்தங்கள் விரும்பி வந்துசேருவர். ஆரோக்கியம் சீராகும். வெளிநாட்டு முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தென்படும்.

துலாம்-புதன்

புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்லும் புதன், அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். 8-க்கு அதிபதியான புதன், 12-ல் சஞ்சரிக் கும்போது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாத காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமை பளிச்சிடும். திடீர் பயணங்களால் திரவிய லாபம் கிடைக்கும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும், அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். ஆடை, அணிகலன்களின் சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. அவர்களின் படிப்பிற்கேற்ற வேலை, சுயதொழில் தொடங்கும் முயற்சி, வெளிநாட்டு உத்தியோகம் போன்றவற்றில் காட்டிய ஆர்வம் பலன்தரும். பொருளாதார நிலை உச்சம்பெறும்.

மீன - சனி

உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், மீனத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். வக்ரம் பெற்ற சனியை குரு பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். கல்யாணம் ஆகாத பிள்ளைகளுக்கு மாலை சூடும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைக்கு இப்பொழுது வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு மகிழ்ச்சியைத் தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com