தனுசு- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

சொத்துக்களால் சகோதரர்களுக்குள் இருந்த ஒற்றுமை குறைவு விலகும்.
Thanusu
Published on: 

குரு கடாட்சம் நிறைந்த தனுசு ராசியினரே... இதுவரை ராசிக்கு எட்டாம் இடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக ஒன்பதாம் இடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் தனுசு ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.

அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள்

அஷ்டம ஸ்தானத்தில் குரு அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் சனி என பலவிதமான இன்னல்களை அனுபவித்து வந்த தனுசு ராசியினருக்கு அதிசார குரு பெயர்ச்சி ஓரளவுக்கு நன்மையை தரும் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. இந்த ஜென்மத்தில் நடைபெற வேண்டிய தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடிவரும்.எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் பலிதமாகும். பூர்வீகத்தில் இருக்கும் வாய்ப்பு குறைந்து பரிபூரண அயல்நாட்டு யோகம் கிடைத்து விடும். ஒன்பதில் குரு வரும் போது சொந்த ஊர், அல்லது சொந்த நாட்டில் இருப்பதைவிட வெளியூர் வெளிநாட்டில் இருந்தால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியும். அதவாது உறவுகளை விட்டு போனால் மட்டும் தான் முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தில் குரு இருப்பவர்கள் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் சென்று வசிக்கும் போது பாதகம் குறைந்து சாதகம் மேலோங்கும். அர்தாஷ்டமச் சனியும், ஒன்பதாமிட குருவும் தனுசு ராசியினருக்கு இடப் பெயர்ச்சியைத் தர முடிவு செய்து விட்டார்கள். தனுசு ராசிக்கு குரு பகவான் ராசி அதிபதி மற்றும் சுகஸ்தான அதிபதி என்பதால் வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து விதமான இன்னல்களுக்கும் சில தீர்வுகள் கிடைக்கும். குருவின் பார்வை பதியும் இடங்களான 1,3,5 ஆகிய இடங்கள் அஷ்டமச் சனியால் ஏற்படும் இன்னல்களை வெகுவாக குறைப்பார் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.

ஞாபக சக்தி

மொத்தத்தில் குரு யதார்த்தத்தையும் பக்குவத்தையும் உணர வைப்பார். சொத்துக்களால் சகோதரர்களுக்குள் இருந்த ஒற்றுமை குறைவு விலகும். வழக்குகள் சாதகமாகும். ஆன்மாவை துன்புறுத்திய மன வேதனைகள் நீங்கும். எதையும் தாங்கும் தைரியம், புதுத்தெம்பு உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.கை மறதியாக வைத்த சொத்து தொடர்பான ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். உயில் எழுதலாம்.உயில்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களில் திருத்தம் செய்யலாம்.அடமானத்தில் இருக்கும் நகைகள் மீண்டு வரும். தொலைந்த நகைகள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட அசெளகரியம் குறையும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.ENT பிரச்சனைகள் சீராகும். ENT பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்ற காலம்.வயது முதிர்ந்தவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளின் வீட்டிற்கு சென்று சிறிது காலம் தங்கி வருவார்கள்.

பொருளாதாரம்

அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பு கிடைக்கும்.தடைபட்ட அதிர்ஷ்டம் துளிர் விடும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் குறையும். கல்வி, திருமணம்,குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என பிள்ளைகளைப் பற்றிய அனைத்து மனக்குறையும் தீரும்.கடனை நினைத்து பயந்து வந்த நோய் தொல்லை குறையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள். உடன் பிறப்புகள் மற்றும் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும்.சிலருக்கு விருப்ப ஓய்வு கிடைக்கும்.எதிர்பாராத அதிர்ஷ்ட பண வரவு கிடைக்கும்.சிலருக்கு வீட்டிற்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்வார்கள்.இளைய மனைவி, மூத்த சகோதரர், சகோதரி மூலம் சொத்து பொருள் சேர்க்கை உண்டாகும்.

பெண்கள்

இது வரை நீங்கள் கடைபிடித்த வீரமும், விவேகமும் மேலும் அதிகரிக்கும்.திருஷ்டி தோஷம் விலகும். ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.இறை நம்பிக்கை அதிகரிக்கும்.தெய்வ அனுகிரகம் உண்டாகும்.பாக்கிய ஸ்தான குருவால் கணவரின் ஆயுள், ஆரோக்கிய குறைபாடு சீராகும்.பணி நிரந்தரமும் பதவி உயர்வும் மகிழ்ச்சியைத் தரும்.இடப் பெயர்ச்சி மன வருத்தத்தை தரும். தாய், தந்தையிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும்.பூர்வீகச் சொத்து எந்த வித எதிர்ப்பு மின்றி கிடைக்கும்.இன்பச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்குப் பிறகு திருமணத்தை முடிவு செய்யலாம்.இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்த வீட்டில் இருந்த சிலர் வாடகை வீட்டிற்கு செல்ல நேரும்.வாடகை வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு மாறுவார்கள்.

மாணவர்கள்

பள்ளி குழந்தைகள் அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தன் நம்பிக்கையும் தைரியமும் கூடும்.இளங்கலை மற்றும் முதுகலை வாய்ப்பு விரும்பிய கல்லூரியில் கிடைக்கும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்றால் ஆனந்தமான வாழ்க்கை அமையும்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் வேலை மாற்றமும் இடமாற்றமும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள். அதிர்ஷ்ட குறைவால் வேலையில் கெளரவம் இழந்தவர்களுக்கும் எங்கேயும் செல்ல முடியாமல் வேலையிழந்து முடங்கி இருந்தவர்களுக்கும் பதவி உயர்வு இல்லை என வருந்தியர்களுக்கும் நிச்சயம் நன்மையான ஏற்றமான பலன்கள் உண்டாகும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செய்ய நேரும். உத்தியோகத்திலிருந்த இடர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.உடல் நலம் சீராகும். நன்மை செய்து பழக்கப்பட்ட உங்களுக்கு யாராவது தீமை செய்ய நினைத்தாலும் அது நடக்காது.

முதலீட்டாளர்கள்

சுய தொழில் செய்கிறவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும்.புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும்.புதிய தொழில் கூட்டாளிகளிடம் மிகுந்த கவனம் தேவை. மிகப் பெரிய புகழ் கிடைக்கும். செல்வச் செழிப்பு உருவாகும்.வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள். குருவின் வக்கிரக காலத்தில் தொழில் கூட்டாளிகளால், நண்பர்களால் மனக்கசப்பு உருவாகும். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். ஆனாலும் வம்பு, வழக்கை குறைக்க அமைதி காத்தல் நலம். வேலையாட்கள் நேரத்திற்கு வேலைக்கு வராமல் பணிகள் தேங்கிப் போகும். சிலருக்கு முதலீடே காணாமல் போய்விடும்.அதிக முதலீட்டில் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் முதலீடு,புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் சுய ஜாதகத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள்

கெளரவப் பட்டங்களும்,பதவியும் தேடிவரும். உங்களின் செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் கலந்து இருக்கும். உற்சாகம் அதிகரிக்கும். உடலுக்கு, ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.மந்த தன்மை விலகும். ஆரோக்கியம் சீராகும்.ஆயுள் குற்றம் நீங்கும்.வைத்தியம் பலன் தரும்.பரம்பரை வியாதிகளான சுகர், பிபி,போன்றவைகள் கட்டுக்குள் இருக்கும்.காரிய சித்தி உண்டாகும். மனம்ஆழ்ந்த சிந்தனையில் லயிக்கும். உள்ளுணர்வு சிறப்பாக செயல்படும்.ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் உடல் பயிற்சிகள், யோகாசனம் போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும்.நினைத்த காரியத்தை நினைத்தபடியே நடத்தும் ஆற்றல் உருவாகும். குருவின் வக்கிர காலத்தில் நிதானம் தவறினால் பல ஆண்டு கால உழைப்பை இழக்க நேரும்.புத்தியை பயன்படுத்த வேண்டிய நேரம்.ஒரு சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வேறு கட்சிக்கு மாறவும் வாய்ப்புள்ளது.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டு விஷ்ணு சகஸ்ஹர நாமம் பாராயணம் செய்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம். எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். மேலும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X