

நம்பிக்கைகள் பலிதமாகும் வாரம். ராசியில் நிற்கும் சனிபகவான் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் ஜென்ம சனியின் தாக்கம் குறையும். உங்களின் செயல்பாடுகளில் நிதானமும், தன்னம்பிக்கையும் இருக்கும். எதிரிகள், போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். இளைய சகோதரர் மற்றும் தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். சிலருக்கு ஊர் மாற்றத்தால் நல்ல முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனுக்காக கடன் வாங்கலாம். திருமண முயற்சி கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்விக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு சாதகமாகும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.