மீனம்- 2026 புரட்டாசி மாத ராசிபலன்

உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி என்பதால், வரவு செலவில் கவனம் தேவை.
Meenam rasipalan
Published on

மீன ராசி நேயர்களே!

பராபவ வருடம் புராட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். என்றாலும் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அதோடு அவர் மீது சூரியனின் பார்வையும் பதிகிறது. எனவே மனவருத்தம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நேரத்தில் கசப்பான தகவல்களும் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென விரயங்கள் அதிகரிக்கும். தெய்வபலம் ஒன்றே உங்களை பாதுகாக்கும் என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் மேற்கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி என்பதால், வரவு செலவில் கவனம் தேவை.

கடக-செவ்வாய்

புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனப்போராட்டம், பணப்போராட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ளமாட்டார்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். பொதுவாழ்வில் திடீரென மாற்றப்பட்ட பொறுப்புகளால் மனக்கலக்கம் உண்டாகும். சகோதர ஒற்றுமை குறையும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

துலாம்-புதன்

உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அவர் அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே பொருளாதாரம் உயரும். மாற்றமும், ஏற்றமும் வந்துசேரும். பேச்சாலும், செயலாலும் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வசதிகள் பெருகும். வருமானம் உயரும். ராஜயோகம் தேடிவரும் நேரம் இது. பிள்ளைகளைப் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். அவர்களின் மேற்படிப்பு. திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு உகந்த நேரம் இது.

மீன-சனி

மீன ராசியில் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் வக்ரம்பெறுவதால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கு பவர் சனி பகவான். எனவே விரயாதிபதி வக்ரம் பெறுவது நல்லதுதான். என்றாலும் லாபாதிபதியாகவும் இருப்பதால் பொருளாதாரத்தில் திடீர், திடீரென பிரச்சினைகள் உருவாகலாம். காரியத்தை தொடங்கி முடிக்க முடியாமல் தடுமாறும் சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வது அரிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு போட்டிக்கு மத்தியில் ஒப்பந்தம் கிடைக்கும். மாணவ மாணவிகள் முயற்சியோடு படித்தால் மட்டுமே வெற்றி பெற இயலும். பெண்கள் 'தான் உண்டு... தன் வேலை உண்டு..' என்று இருப்பது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

X

Maalai Malar
www.maalaimalar.com