2024 புரட்டாசி மாத ராசிபலன்

Published on

முயற்சியும் பயிற்சியும் நமக்கு மூலதனம் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் அமர்ந்தபடி, தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார்.

எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக்கொள்வீர்கள். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். பூமி வாங்கும் யோகம் உண்டு. புனிதப் பயணங்கள் உருவாகும். சர்ப்பக் கிரகங்களை முறையாக வழிபட்டால் சகல யோகங்களும் வந்துசேரும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருப்பவர் சனி. அவர் வக்ரம் பெறுவது, ஒரு வகையில் நன்மைதான். என்றாலும் லாபாதிபதியாகவும் சனி இருப்பதால், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அடிக்கடி பிரச்சினைகளும், குறுக்கீடுகளும் வந்துகொண்டே இருக்கும்.

இருப்பினும் தைரியமும் தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள் எதையும் சமாளித்து விடுவீர்கள். வெளிநாட்டு பயணத்தில் கொஞ்சம் தாமதங்கள் ஏற்படலாம். இக்காலத்தில் முறையான வழிபாடுகள் முன்னேற்றப் பாதிப்பில் இருந்து விடுபட வைக்கும்.

புதன் உச்சம்

புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். களத்திர ஸ்தானாதிபதியான அவர், களத்திர ஸ்தானத்திலேயே உச்சம் பெறுவது யோகமான நேரமாகும். 'இல்லத்தில் மங்கல ஓசை கேட்க முடியவில்லையே' என்ற நீண்ட நாட்களாக இருந்த ஏக்கம் தீரும். 'வரன்கள் வாசல்வரை வந்து கைநழுவிப் போகிறதே' என்ற மன வாட்டம் மறையும்.

தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் கைகூடிவரும். திடீரென வரன்கள் வந்து திக்குமுக்காட வைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டையே விலைக்கு வாங்கும் யோகம் உண்டு.

துலாம் - சுக்ரன்

புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். இக்காலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. அஷ்டமாதிபதி வலுவடையும் இந்த நேரத்தில், தடைகள் அதிகரிக்கும். உறவுகள் பகையாகலாம். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது.

வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காகும். வாகனப்பழுது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், உயர் அதிகாரிகளின் முரண்பாடான குணத்தினால் 'வேலையில் இருந்து விலகிக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

துலாம் - புதன்

புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இக்காலத்தில் பொருள் வரவு திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் இரு மடங்காகும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம், நாடு மாற்றம் போன்றவை நிகழும் நேரம் இது.

பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி செலவிடுவீர்கள். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, விருப்பமான வகையில் பணியிட மாற்றம் அமையாது.

கலைஞர்களுக்கு, நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். மாணவ - மாணவிகள் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பெண் களுக்கு 'வரவைக் காட்டிலும் செலவு கூடுகிறதே' என்ற கவலை மேலோங்கும். சேமிப்பு கரையும் நேரம் இது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

செப்டம்பர்: 21, 22, 25, 26, அக்டோபர்: 5, 6, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

X

Maalai Malar
www.maalaimalar.com