வரவேற்பதில் வல்லவர்களாக விளங்கும் மீன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியும் தொடர்கிறது. மேலும் விரயச் சனியும் இம்மாதம் வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுகிறார்.
எனவே வருமான பற்றாக்குறை, வளர்ச்சியில் தளர்ச்சி, மனக்கவலை ஏற்படும். நினைத்தது நிறைவேறுவதில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உறவினர் பகை உருவாகி மனக்கலக்கத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை அதிகம் தேவைப்படும் மாதம் இது.
செவ்வாய் நீச்சம்
ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் தடுமாற்றம் ஏற்படும்.
பெற்றோர் வழி பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். பாகப்பிரிவினைகள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும். மனச்சோர்வு அதிகரிக்கும். விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நேரம் இது.
விருச்சிகம் - புதன்
ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 4-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 9-ம் இடத்திற்குச் செல்வது யோகமான நேரம்தான். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.
தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். 'பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கலாமா?' என்ற சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.
சனி வக்ர நிவர்த்தி
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே ஏழரைச் சனி வலுவடைகிறது. விரயங்கள் கூடும். விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும்.
கடன் சுமை குறைந்தாலும் மீண்டும் புதிய கடன்கள் உருவாகும். தொழில் கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது, அவசரம் காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
தனுசு - சுக்ரன்
ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் வேளையில், தொழிலில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
கொடுக்கல்- வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிநாதன் குருவிற்கு, சுக்ரன் பகைக்கிரகம் என்பதால் எதிர்பார்த்த காரியங்களில் இடையூறுகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு திடீர் மாற்றம் ஏற்பட்டு, மனக்கலக்கம் உருவாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவை காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாகத் திறமை பளிச்சிடும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. மறதி அதிகரிக்கலாம். பெண்களுக்கு செலவு கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 23, 24, நவம்பர்: 3, 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.