

ராஜயோகம் நிறைந்த மீன ராசியினரே...இதுவரை ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக ஆறாம் இடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் மீன ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.
அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள் மீன ராசிக்கு 1,10 ஆகிய இரு கேந்திரங்களுக்கு அதிபதியானகுரு பகவான் ஆறாமிடமான மறைவு ஸ்தானத்தில் மறைவது சிறப்பல்ல. குரு நின்ற ஆறாமிடத்தின் மூலம் சுப பலன்கள் குறைவு பட்டாலும் பார்வை படும் 10,12, 2ம் இடங்களின் மூலம் சுபபலன்கள் உண்டு. தொழில் ஸ்தானமாகிய பத்தாமிடத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை கிடைக்கிறது. கமிஷன் அடிப்படையிலான முதலீடற்ற தொழில் செய்பவர்களுக்கு மிக மிக சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.
தொழிலில் புதிய திட்டங்களை மாற்றங்களை செயல்படுத்துவீர்கள். பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விட முடியும். பெரிய தொகையை கடன் பெற்று அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது. ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். ஆயுளுக்கு பங்கம் விளைவிக்க கூடிய கொடிய நோய்க்கு சிகிச்சை செய்பவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கர்ம வினைத் தாக்கத்தால் ஏற்படும் பரம்பரை வியாதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் நிவாரணம் ஏற்படும். நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். உடலும், மனமும் புத்துணர்வு பெறும். லாபத்திற்கேற்ற விரயமும் இருக்கும்.ஜனன கால ஜாதகத்தில் 6,8,12ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா புக்தி நடப்பவர்கள் கருத்து வேறுபாட்டால் சட்டரீதியாக பிரியலாம். நீண்ட நெடுங்காலமாகமுடியாமல் இருந்த விவாகரத்து வழக்குகள் முடியும். சிலர் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சங்கடம் மற்றும் சலிப்பால் தலைமறைவாகலாம். தொழில் கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடு மிகுதியாகி கூட்டுத் தொழில் உடையும். கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் சகோதரர்கள் தொழிலை பிரித்து தனிக் குடித்தனம் செல்வார்கள். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசா புக்தி நடப்பவர்கள் வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்று வருவார்கள்.
மனக் குழப்பம், பய உணர்வு,கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, செரிமானக் கோளாறு போன்ற பாதிப்பு இருக்கும். வீண் பழி, நடத்தையின் மேல் களங்கம் ஏற்படுத்தும் விதமான அவப்பெயரை தேடித் தருவார் என்பதால் அதிக கவனம் தேவை. சிலருக்கு தேவையற்ற நட்பு ஏற்படும் அல்லது தீய வழியில் பொருளீட்டும் சிந்தனையை தருவார். உடன் பிறந்த பெண்கள் மூலம் தேவையில்லாத மனக்கசப்பு வரலாம்.
இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்யும் எண்ணம் வரும். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். பொருளாதர முன்னேற்றம் மகிழ்ச்சியை தரும். பல்வேறு விதமானயோகன பலன்கள் வீடு தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். பேச்சை தொழிலாக கொண்ட ஆசிரியர்கள், மார்கெட்டிங் செய்பவர்கள், ஜோதிடர்கள், கமிஷன் ஏஜென்ட்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தேவைக்கு மிகுதியான உபரி வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்கள் சீராகும்.வெளிநாட்டு வாய்ப்பை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு தூரதேச பயணம் ஏற்படும். ஏற்கனவே வெளிநாட்டில் இருப்பவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நடத்துபவர்களுக்கு பொற்காலம்.
வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.திருமணமான தம்பதிகள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய காலம். உயர்குலத்தவராலும், உறவினர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். மதப்பற்று மிகும். குழந்தைகளின் நலனில் ஆர்வம் உருவாகும். நல்ல துணிச்சலும், குரு பக்தியும் ஏற்படும். நிறைந்த வருமானம் இருக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குருவின் வக்கிர காலத்தில் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாக காலமாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் ஏற்படும் கடனுக்கு அல்லது குடும்பத்திற்கு நீங்கள் பணம் செலவு செய்ய நேரும். அவர்களின் சுமைதாங்கியாக இருக்க வேண்டிய காலம். அதனால் கருத்து வேறுபாடு வரும் என்பதால் கவனம் தேவை. ஒரு சிலர் மூத்த சகோதர, சகோதரிக்காக பூர்வீக சொத்தை விட்டுக் கொடுக்கலாம். எவ்வளவு மனபாரம் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
ஜாலியாக இருப்பதுடன் வரும் கல்வியாண்டில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த உங்களை தகுநிலைப்படுத்துவது மிக முக்கியம். வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய காலமாகும். பள்ளி கல்லூரி படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைபட்ட பதவி உயர்வு தேடி வரும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. உங்கள் அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்ச்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். சில மாற்றங்களும் ஏற்றங்களும் வந்து சேரும். குருவின் வக்ரகாலத்தில் ஒரு சிலருக்கு மன வருத்தத்தை தரும் பிரச்சனைகளும் வந்து சேரும். உடன் வேலை பார்ப்பவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை அனுபவிக்க நேரும். போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள வேண்டிய காலம். சிலருக்கு வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்தாலும் போய் சேருவதில் தடை, தாமதம் உருவாகும். சிலர் மெமோ வாங்க வாய்ப்பு உள்ளது.
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலத்தில்புதிய முதலீடுகள், ஒப்பத்தங்களை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். பரம்பரை நோய் தாக்கம் குறைந்து பூரண ஆரோக்யம் கிடைக்கும். அரச துரோகத்தால் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் குறைந்து விடுதலை கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான சலுகைகள் கிடைப்பதில் இருந்ததடை தாமதங்கள் விலகும் ஏற்படும். குருபகவான் வக்ரம் அடையும் காலத்தில் பூர்வீகத்தை விட்டு வெளியேறக் கூடாது. குல தெய்வ வேண்டுதல்களை வக்ர நிவர்த்திக்கு பிறகு செய்ய வேண்டும்.
இதுவரை அரசியலில் காலடி எடுத்து வைக்காதவர்கள் அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அரசியல் களத்தில் குதிப்பீர்கள். அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு பொறுப்புகளும் கெளரவப் பதவிகளும் விபரீத ராஜ யோகமாக தேடி வரும். சில புத்தி சாலி அரசியல்வாதிகள் கட்சி விட்டுக் கட்சி மாறி தமது அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கிக் கொள்வார்கள். எதிர்காலம் பற்றிய தைரியமும் தன்நம்பிக்கையும் அதிகரிக்கும். குருவின் வக்ர காலத்தில்கூட்டணி கட்சியின் மூலம் சில பல சங்கடங்களையும் சந்திக்கலாம். கூட்டணி கட்சிகளுடனும், நண்பர்களுடனும் சலிப்பு சங்கடங்களை தவிர்க்க வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வழிபடவும். பெளர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குல தெய்வத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து சர்க்கரை பொங்கல் படையலிட பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும்.