

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே பலம்பெற்று சஞ்சரிக்கிறார். அவரோடு சஞ்சரிக்கும் சூரியன் நீச்சம் பெறுகிறார். எனவே "நீச் சபங்க ராஜயோகம்' உருவாகின்றது. மேலும் உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே 'புத ஆதித்ய யோகம்', 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும் மாதம் இது.
மாதத் தொடக்கத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரித்து வந்த குரு பகவான், ஐப்பசி 3-6 தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வகர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து அதற்குரிய பலன்களை வாரி வழங்கப்போகிறது. குருவின் பார்வை சகாய ஸ்தானத்தில் பதிவதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கப்போகிறது. முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். முக்கியப் புள்ளிகள் உதவிகரமாக இருப்பர். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். முக்கியப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். உடன்பிறப்பு கள் உறுதுணையாக இருப்பர்.
குருவின் பார்வை 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் பிள்ளைகளின் திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். மேலதிகாரிகள் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பர். நீண்டதூரப் பயணங்கள் பலன் தரும். பிறருக்குப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும், உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு. 13.11.2026 அன்று 4-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இதை 'அர்த்தாஷ்டம ராகு' என்று சொல்வார்கள். அங்கு சுமார் ஒன்றரை ஆண்டு காலங்கள் சஞ்சரித்து தங்கி இருக்கும் பொழுது புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலத்தை சீராக்கிக்கொள்ள இயலும். கடல் தாண்டிச் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க முன்வருவீர்கள். தொழிலை விரிவு செய்ய போதுமான மூலதனம் கிடைக்கும். 'சுட்டிய வீட்டை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வீடு வாங்கும் யோகம் உண்டு.
10-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவால் தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். எதிரிகள் விலகுவர். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. தனித்தியங்கும் ஆற்றல் ஏற்படும். கூட்டாளிகளை விலக்கிவிட்டு தானே முன்னின்று தொழிலை நடத்த முன்வருவீர்கள். சொந்தக் கட்டிடத்திற்கு தொழிலை மாற்றுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடம். பூமி விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவர். வெளிநாட்டு முயற்சி கைகூடும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் நாடிவரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் குவியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு வசதிகள் பெருகும். மாணவ மாணவிகளுக்கு பாராட்டும், பரிசும் கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டிற்கும், புகுத்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.