

சுமாரான வாரம். ராசியில் சூரியன், கேது, புதன் சேர்க்கை உள்ளது. இது கிரகணதோஷ அமைப்பாகும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். மறைமுக தொல்லை கொடுத்த சகோதரிகள் தாயின் நகைகள் மற்றும் உடமைகளில் உரிமை கோருவார்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதால் உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களின் இளைய சகோதரரை நம்பி சில இழப்புகளை சந்திக்கலாம். புதிய கட்டிடம், மனை, தோட்டம், வாகனம் வாங்குவீர்கள். சிலரின் இனம் புரியாத நோய்க்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கிய கேட்டால் படுக்கையில் கிடந்தவர்கள் நன்கு தேறுவார்கள். குழந்தைகள் படிப்பில் அறிவில் சிறந்து விளங்குவார்கள். உறவினர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது கௌரவத்தை அதிகப்படுத்தும். குடியிருக்கும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சிலர் செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக அனுபவிக்க நேரலாம். வயதானவர்களுக்கு பூர்வீகத்தில் சென்று குடியேற வேண்டும் என்ற விருப்பம் உதயமாகும். தினமும் விநாயகரை வழிபடுவதால் தீய வினைகள் அண்டாது.