

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநா தன் சூரியன் உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். எனவே இம்மாதம் ஒரு யோகமான மாதமாகும். நினைத்தது நடக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி பெறும் சூழல் உருவாகும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். பொறுப்புகளும், புதிய பதவிகளும் தானாகவே தேடிவரும். மறுப்பு சொல்லி உங்களை விட்டு விலகியவர்கள் மறுபரிசீலனை செய்து உங்களோடு இணைய முன்வருவர். வியாபாரம் வெற்றிநடைபோடும்.
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். தன லாபாதிபதியான புதன், உங்கள் ராசியில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். பணம் பலவழிகளில் வந்து பையை நிரப்பும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளை தீர்ப்பீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உடல்நலக் குறைபாடு அகலும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உருவாகும். என்றைக்கோ கொடுத்த கடன் இப்பொழுது வசூலாகும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள்.
ஆவணி மாதம் 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும்போது வெற்றிச் செய்திகள் வீடு தேடிவரும். வழக்குகள் சாதகமாக முடியும். புதிதாகத் தொடங்கிய தொழிலை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு, பழைய தொழிலையே தொடர்வதற் கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நட்பு பலப்படும். இதுவரை நீங்கள் எதிர்பார்த்திருந்த உயர்பதவி கிடைக்கும். பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். நடைபெறும் தொழிலை இடமாற்றம் செய்யலாமா? அல்லது வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் நமக்கு வருமா? என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு, அதற்கான பதில் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாக வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு கனவு நனவாகும். மாணவ மாணவிகளுக்கு பாராட்டும், புகழும் கூடும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.