2024 ஐப்பசி மாத ராசிபலன்

Published on

ரகசியங்களைக் காப்பாற்றும் வல்லமை பெற்ற மிதுன ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் புதன், சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இதன்மூலம் 'புத ஆதித்ய யோகம்' செயல்படுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். சென்ற மாதத்தில் கைநழுவிச் சென்ற வாய்ப்புகள், இப்பொழுது கைகூடி வரும்.

செவ்வாய் நீச்சம்

ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 6-க்கு அதிபதி நீச்சம்பெறுவது யோகம்தான். எதிரிகளின் தொல்லை குறையும். எடுத்த காரியங்களில் இருந்த தடை அகலும்.

நல்ல நிறுவனங்களில் பணிபுரிய வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை, படிப்படியாக குறையும். உத்தியோகத்தில், சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம் - புதன்

ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் புதன். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி, தனித்து இயங்க முற்படுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும்.

சனி வக்ர நிவர்த்தி

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். சனி பலம்பெறும் இந்த நேரம், யோகமான நேரம்தான். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பலம்பெறுவதால், உங்கள் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும்.

பக்கபலமாக இருப்பவர்கள், உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும்.

தனுசு - சுக்ரன்

ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும்.

பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக இருக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

கலைஞர்கள் முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைப்பர். மாணவ - மாணவியர் எதிர்பார்த்த இலக்கை அடைவார்கள். பெண்களுக்கு உறவினர்களால் நன்மை உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18, 19, 24, 29, 30, நவம்பர்: 11, 12, 13, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

X

Maalai Malar
www.maalaimalar.com