

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி 3-ம் இடத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அதே நேரம் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே மனக்கசப்புகள் மாறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். கல்யாண முயற்சிகள் கைகூடும். தொழில் போட்டிகள் அதிகரித்தாலும், அதற்கு மத்தியிலும் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனிக்குரிய வழிபாட்டை முறையாக செய்தால் தடைகள் அகலும்.
ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத நல்ல மாற்றங்கள் வந்துசேரும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் திட்டமிடாமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் மற்றும் பிரபலமானவர் களின் பழக்கத்தால், தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். துணிந்து எடுத்த முடிவுகளால் மற்றவர்களை ஆச்சரியப்படச் செய்வீர்கள். கல்வி, கலை சம்பந்தமாக ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். தக்க சமயத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பும், தாராள மனம் படைத்த உறவினர்களால் பொருளாதார உதவியும் கிடைக்கும்.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானாதிபதியான அவர். தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ் காலத் தேவை பூர்த்தியாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒருநல்ல காரியத்தை முடித்து வைப்பீர்கள். முக்கியப் பிரமுகர்கள் உங்கள் இல்லம் தேடிவந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். பொதுநலனில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு தள்ளிப்போன ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். மாணவ - மாணவியருக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும்.