2024 ஆவணி மாத ராசிபலன்

Published on

எதையும் திட்டமிட்டு செய்து வெற்றியைப் பெறும் மகர ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். அவர் மீது சூரியனின் பார்வை பதிகிறது. அதே நேரம் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே சில தடைகளும், தாமதங்களும், குறுக் கீடுகளும் ஏற்படும்.

இருப்பினும் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடிவிடும். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உத்தியோகம் மற்றும் தொழிலில் மாற்றமும், ஏற்றமும் கிடைக்கும் மாதம் இது.

சனி - சூரியன் பார்வை

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். இந்த பகைக் கிரகங்களின் பார்வையால், குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு கள் நடைபெறாமல் போகலாம். ஒரு சில காரியங்களில் இழப்புகளும் ஏற்படும்.

உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் ஏற்பட்டு, மனக்குழப்பத்தை அதிகரிக்கச் செய்யும். உற்றார் - உறவினர்களின் ஆதரவு குறையாமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இதுபோன்ற காலங்களில் நிதானத்தோடும், அமைதியோடும் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் காக வாகனத்தானையும், சூரிய பகவானையும் கை தொழுது வழிபட வேண்டும்.

சுக்ரன் நீச்சம்

ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக பிள்ளைகள் வழியிலும் பிரச்சினைகள் வரலாம். பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துகளாலும் பிரச்சினைகள் வரலாம்.

நினைத்த காரியத்தை உடனடியாக செய்ய முடியாது. சகோதர வழியில் செலவுகள் அதிகரிக்கும். தொழிலை மாற்றுவது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீ காரம் கிடைக்காது. சகப் பணியாளர்களின் அனுசரிப்பு குறையலாம்.

மிதுன - செவ்வாய்

ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். பணிபுரியும் இடத்தில் உங்களையும் ஒரு பங்குதாரர் களாக சேர்த்துக் கொள்வதாகச் சொல்லலாம். தொழில் நடத்துபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும்.

நடத்தும் தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். பெற்றோரின் ஆதரவு பெருமை சேர்க்கும். புண்ணிய தலங்களுக்கு எண்ணியபடியே சென்று வழிபட்டு வருவீர்கள். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் யோகம் உண்டு.

சிம்ம - புதன்

ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 8-ம் இடத்திற்கு வரும் பொழுது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, திடீர் திடீரென நல்ல மாற்றங்கள் வந்துசேரும். எதையும் சிந்திக்காமல் செய்தால் கூட சிறப்பான பலன் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும்.

புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும். பொதுவாக இக்காலத்தில் எடுத்த முயற்சி கள் அனைத்தும் வெற்றியாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும்.

வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள், அதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு கவுரவம் - அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு வரன்கள் வாசல் தேடி வரும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 21, 22, 24, 25, செப்டம்பர்: 5, 6, 7, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

X

Maalai Malar
www.maalaimalar.com