

சகிப்புத்தன்மை நிறைந்த மகர ராசியினரே.. இதுவரை ராசிக்கு ஏழாமிடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக அஷ்டம ஸ்தானமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் மகரம் ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.
மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவது சிறப்பு. ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் மறைவது சிறப்பு. எட்டாமிடம் என்பது விபத்து, கண்டம், அவமானம், கெளரவக் குறைவு, ஆயுளுக்கு பங்கம் தரும் நோய் தாக்கம், விரக்தி ஆகியவற்றை உருவாக்கும். முன்னோர்களின் பரம்பரை நோய்களான சுகர், பிபி, தைராய்டு, கைகால் மூட்டு வலி போன்றவைகள் அழையா விருந்தாளியாக வந்து சேரும். உத்தியோகம் மற்றும் தொழில் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்லலாம். சிலர் தந்தையுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழலாம். அல்லதுதந்தைக்கு வைத்திய செலவு அதிகரிக்கும். தந்தை வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு மிகுதியாகும். கூட்டுத் தொழில் செய்யும் தந்தை, மகனுக்கு மனஸ்தாபம் தோன்றும். சிலர்பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைக்காக வழக்கு பதிவு செய்யலாம்.பணமா? பாசமா என்ற மனப் போராட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் சம்பளம், வேலை பார்க்கப் போகும் கம்பெனி பற்றிய முழு விபரங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. எட்டாமிடம் என்பது திடீர் அதிர்ஷ்டத்தைப் பற்றி கூறுமிடம் என்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் தேடி வரும். சிலரின்முக்கிய சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணம் கிடைக்கும். எட்டாமிட குருவால் சுப பலன்கள் குறைவு பட்டாலும் குருவின் பார்வை படும் இடங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. தீராத நோய் தாக்கத்தால் நீண்ட நெடுங்காலமாக மருத்துவமனை, தங்கி வைத்தியம் செய்தவர்கள் வீடு திரும்புவார்கள். பயம் குறைந்து, நிம்மதி ஏற்படும்.
முதியோர் இல்லத்தில் இருக்கும் தாத்தா, பாட்டியை பேரன், பேத்திகள் வீட்டிற்கு அழைத்துவார்கள். குடுபத்துடன் வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.பிள்ளைகளின் கல்யாணம், வளைகாப்பு என சுப செலவுகள் அதிகமாகும். நகைநட்டு வாங்குவது, நிலம், வீடு,வாகன யோகம் என சுப விரயங்கள் மன மகிழ்வைத் தரும். வாடகைக்கு போகாமல் இருந்த சொத்துக்கள் வாடகைக்கு போகும். விற்க முடியாமல் கிடந்த பழைய சொத்துக்கள் விற்று முழு பணமும் வந்து சேரும். எப்பொழுதோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். தடைபட்ட வீடு கட்டும் பணி விறுப் விறுப்படையும். கிரகப் பிரவேசத்திற்கு தேதி குறிக்கலாம். புதிய வாகன யோகம் கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள். தாயின் ஆரோக்கியத்திலிருந்த பின்னடைவு சீராகும். தாயின் அன்பும் நல்லாசியும் கிடைக்கும். தாய்வழிச் சொத்திலிருந்த வில்லங்கங்கள் சீராகும்.
பொருள் குறைபாடு நீங்கும். வரவுக்குள் செலவு செய்ய முடியாமல் இருந்த உங்களுக்கு தன வரவு திருப்த்தியாக இருக்கும். பற்றாக்குறை பட்ஜெட் இருக்காது. வீண் விரையம் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். இதுவரை வறுமையில் வாடியவர்களுக்கு பொருளாதாரம் மேன்மையால் நல்ல உணவு உடை கிடைக்கும். ஒருவர் வருமானத்தில் நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு நிலையான வருமானம் வரத் துவங்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். பணக் கவலையும் மனக்கவலையும் தீரும் காலம். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கி கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக் கொள்ள நேரும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. சொத்துப் பத்திரத்தை அடமானம் வைத்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அதிக வட்டிக்கு கடன்கொடுக்கக்கூடாது. கொடுத்த பணம் திரும்ப வராது.
வாக்கு வன்மை பெறும்.குடும்பத்தில் தவறான வாக்கு பிரயோகத்தால் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் அகலும்.இதுவரை பாரா முகமாக இருந்த குடும்ப உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகரிக்கும். மனதை மகிழ்விக்கும்சுப விசேஷங்கள் நடக்கும். மகன் மற்றும் மகளின் திருமணம் இனிமையாக நடந்து முடியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகமாகும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். திறமைகளை வெளிக்காட்டி சிறப்படைய முடியும். வாழ்க்கையில் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்கும். புகுந்த வீட்டில் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பாராத திடீர் யோகங்கள் வந்து சேரும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டு பொருட்கள் மீது நாட்டம் கூடும். ஒரு சிலர் அழகு ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பார்கள். மூத்த சகோதர, சகோதரிகளிடமிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அன்பும் ஆதாயமும் கிடைக்கும்.
அரசு பொது தேர்வு நடைபெறும் போது குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் மகர ராசி 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி. டிவி,போன் என பொறுப்பில்லாமல் இருந்த குழந்தைகள் படிப்பின் அவசியத்தை உணர்ந்து எதார்த்த வாழ்க்கைக்கு வருவார்கள். சுமாராக படித்த மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும். அரியர்ஸ் பாடங்களை மீண்டும் எழுதி மேற்படிப்பை தொடரும் அமைப்பு உருவாகும்.
சிலருக்கு வெளியூர், வெளிநாடு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். ஜனன கால ஜாதகத்தில் 9, 12ம் அதிபதியின் தசை அல்லது புத்தி நடந்து கொண்டு இருப்பவர்களாக இருந்தால் வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கண்ணில் இருந்த குறைபாடுகள் சரியாகும். ஆடம்பர சுக போக விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.அதே நேரத்தில் அஷ்டம குருவின் பார்வை இரண்டாமிடத்திற்கு இருப்பதால் பேச்சுத் திறமையால் பல காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.தனியார் துறையில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம்எதிர்காலம் பற்றிய சிந்தனையும், கவலையும் மேலோங்கும்.
தொழில் அபிவிருத்தி செய்யும் எண்ணம் மிகும். ஜென்ம ராசிக்குள் ராகு நுழைவதால் சுய ஜாதகம் அறிந்து புதிய தொழில் முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது.வியாபாரம் சிறப்பாக நடைபெற்று பணவரவு இருந்தாலும் லாபம் நிற்காது. வேலைப்பளு மிகும்.மந்தமாக இருந்த தொழில் சூடு பிடிக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும்.அஷ்டம குரு என்பதால் பகல் இரவு பாராது அதிக நேரம் உழைக்க நேரும்.பல மதர ராசியினருக்கு பழைய, பால்ய வயது நண்பர்கள், பழக்கமான நபர்கள் என வியாபார விஷயமாக பல பழைய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். நட்பு வட்டம் பெரிதாகும். வம்சாவளியாகபூர்வீகத்தில் தொழில் வியாபாரத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டால் பெரிய பாதிப்பு இருக்காது.விவசாயிகளின் அரசின் ஆதரவு கிடைக்கும். விதைகள், உரங்கள் சகாய விலையில் கிடைக்கும்.இலவச கால்நடைகள் கிடைக்கும்.
அரசியலில் முக்கிய பங்கு, பதவி வகிப்பீர்கள். நீங்கள் விரும்பிய பதவி உங்களை தேடி வரும். பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும். எதிர் கட்சியினர் உங்களுக்கு அடங்கி போவார்கள்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பொருளாதாரம், பண பரிவர்த்தனை தொடர்பான வம்பு, வழக்கு வீட்டு கதவை தட்டி வரும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சட்டத்தை நாடாமல் இருப்பது நலம்.சட்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காலம் என்பதால் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என பிரச்சனைக்கு சம்பந்தம் பெற்ற நபருடன் நேரடியாக பேசி சமரசம் செய்ய முயற்சிக்க வேண்டும். குருபகவான் வக்ரம் அடையும் காலத்தில் நாற்காலி ஆடும் என்பதால் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பதவியின் தன்மையறிந்து பொறுப்பாக இருக்க வேண்டும்.
பரிகாரம்
பிரதோஷ காலத்தில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்து வரவும்.தினமும் வீட்டின் அருகில் உள்ள விநாயகருக்கு அறுகம்புல் சாற்றி வழிபடவும்.