கடகம்- 2026 புரட்டாசி மாத ராசிபலன்

உங்கள் ராசியில் குருபகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார்.
Kadagam rasipalan
Published on

கடக ராசி நேயர்களே!

பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் குருபகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு வழிகாட்டும். இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது இல்லம் வாங்கிக் குடியேறுவதில் கவனம் செலுத்துவீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ராசியில் இருக்கும் குருவைப் பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குருகவசம் பாடி குரு பகவானை வணங்குவது நல்லது.

கடக-செவ்வாய்

புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். செவ்வாய் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் ஆவார். உங்கள் ராசிக்கு 5. 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வலிமை இழக்கும்போது பிள்ளைகளால் பிரச்சினைகள் வரலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. விரயங்கள் அதிகரிக்கும். சொத்துப் பிரச்சினையால் சொந்தங்கள் பகையாகலாம். புதிய தொழில் தொடங்கியது திருப்தியாக நடைபெறவில்லை என்று அதைக் கொடுக்க முன்வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி செயல்பட வேண்டாம். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களின் நன்மைக்காக நீங்கள் கொடுத்து உதவி செய்தாலும், அவர்கள் பகைமை பாராட்டுவர்.

துலாம்-புதன்

உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அங்கு பலம் பெற்ற சுக்ரனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக சுபச்செலவுகள் அதிகரிக்கும். கல்யாண முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக இல்லத்தில் மங்கல ஓசை கேட்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது சுபச்செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத தன லாபம் உண்டு. என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடத்தை, இப் பொழுது அதிக விலைக்கு விற்பீர்கள். அதன் மூலம் வரும் லாபத்தைக் கொண்டு புதிய தொழிலுக்கான மூலதனத்தைப் போடுவீர்கள். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு, புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள்.

மீன-சனி

இந்த மாதம் முழுவதும் மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரை கடகத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் பார்ப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப பாக்கிய ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே நீங்கள் எதை எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களோ அந்த காரியம் நடைபெறும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஒருசில சமயங்களில் சிறுசிறு குறுக்கீடுகள் வரலாம். இருப்பினும் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அஞ்சா நெஞ்சமும், அறிவு திறமையும் கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளுக்கு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும். தொழில் மாற்றங்களை செய்யலாமா என்று சிந்திக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனநிம்மதி குறையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு நல்ல தகவல் இல்லம் தேடிவரும். நாடு மாற்றம், வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com