கடகம்- 2026 ஐப்பசி மாத ராசிபலன்

பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம், கவனம் தேவை.
Kadagam rasipalan
Published on: 

கடக ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் குரு உச்சம் பெற்றும், செவ்வாய் நீச்சம் பெற்றும் சஞ்சரித்து நீச்ச பங்க ராஜயோகத்தை உருவாக்குகிறார். மாபெரும் கிர கமாக விளங்கும் குரு. மாதத் தொடக்கத்திலேயே சிம்மத்திற்கு வந்து விடுகிறார். மாதக் கடைசியில் சப்தம ஸ்தானத்தில் ராகுவும், ஜென்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள்.

சிம்ம குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி மாதம் 3-ந் தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் செல்லப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்கள் புனிதமடைகின்றன. எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் 6-ம் இடத்தை குரு பார்ப்பது யோகம்தான். இதுவரை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்த உங்களுக்கு இனி நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலமாக சில சலுகைகள் கிடைக்கலாம்.

குருவின் பார்வை 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. பெற்றோரின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாமா மாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கலாம்.

ராகு -கேது பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் இருந்த ராகு பகவான், 13.11.2026 அன்று 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். அதே நேரம் ஜென்ம ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் இப்போது முழுமையாக உங்கள் ராசிக்கு வந்துள்ளதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை இருக்கும். என்றாலும் முறையான வழிபாடுகளை செய்தால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வாழ்க்கைத் துணையோடு பிரச்சினைகள் வராமல் இருக்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. வரன்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒருசிலருக்கு இடமாற்றம் மட்டுமல்ல, உத்தியோக மாற்றம் வரலாம்.

ஜென்ம ராசியில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்தினைவைர். எதிர்மறைச் சிந்தனைகள் அவ்வப்போது தலைதூக்கும். புதியவர்களை நம்பிச் செயல்பட வேண்டாம். பொருளாதார நெருக்கடி அகலும். கணிசமான தொகை கைகளில் புரண்டாலும் உடனுக்குடன் செலவாகி கலக்கத்தையும் ஏற்படுத்தும் பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம், கவனம் தேவை.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கடன்கமை கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்கள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது விரயங்கள் அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com