கடகம்- குரு அதிசார வக்ர பெயர்ச்சி பலன்கள்

வாழ்வில் நடக்க வேண்டிய அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும்.
Kadagam
Published on: 

தாய் அன்பு நிறைந்த கடக ராசியினரே.... இதுவரை ஜென்ம ராசியில் உச்ச கதியில் சஞ்சரித்த குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு 31.10.2026 அன்று அதிசாரமாக செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் கடக ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.

அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள்

கடக ராசிக்கு குரு 6,9ம் அதிபதி. அதாவது கடன் நோய் எதிரி, உத்தியோகம் பற்றி கூறுவது ஆறாமிடமாகும். லௌகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து பாக்கியங்களையும் கூறுவது ஒன்பதாம் இடமாகும். ஆறாம் அதிபதியாக குரு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செல்வதில் வரக்கூடிய வருமானம் அனைத்தும் விரயமாகும். அல்லது கடன், நோய்க்கு செல்லும். பாக்கிய ஸ்தான அதிபதியான குரு பகவான் தன ஸ்தானத்திற்கு செல்வதால் பொருளாதாரம் மேன்மை பல மடங்கு கூடும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில் குலத்தொழில் மூலம் வருமானம் உயரும். வாழ்வில் நடக்க வேண்டிய அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும். குருபகவான் தன ஸ்தானம் செல்வதால் சாதகம் பாதகம் கலந்த பலனே நடக்கும். ஆறாம் அதிபதி குரு தன ஸ்தானத்திற்கு வருவதால் விரயம் ஏற்படும் என்று பலன் சொன்னால் வரவு இருந்தால்தானே செலவு செய்ய முடியும் என்று உங்களுக்கு கேள்வி எழும்பும்.

ஆவணங்கள்

பாக்கிய சனியாக இருந்தாலும் சனி கடகத்திற்கு 7,8ம் அதிபதி என்பதால் தன வரவு இருந்து கொண்டே தான் இருக்கும். ஐந்து ரூபாய் மிச்சமில்லாமல் செலவும் இருந்து கொண்டேதான் இருக்கும். கோபித்துக் கொண்டோ, மனவருத்தத்திலோ வீட்டை விட்டுப் போன உறவுகள் வீடு திரும்புவார்கள். தொலைத்து போன,கை மறதியாக வைத்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திரும்பவும் கிடைக்கும்.சிலர் காணாமல் போன ஆவணங்கள் நகல் போடுவார்கள். இதுவரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த சகோதரர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். சிலரின் இளைய சகோதரம் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்லலாம். சிலருக்கு நிதானமற்ற நிலை பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.எந்தப்பிரச்சனையையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் இருக்கும். சிலருக்கு ஞாபக மறதி மற்றும் மனச் சோர்வு மிகுதியாகும். இந்த அதி சார பெயர்ச்சியால் குரு தன் ஆதிபத்திய ரீதியாக சில சங்கடங்களைக் கொடுத்தாலும் தன் பார்வை படும் 6,8,10ம் இடங்கள் மூலம் பல அசுபங்களையும் குறைப்பார். அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும். உங்களை அவமானப்படுத்திய வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் நன்நடத்தை காரணமாக விடுவிக்கப்படுவார்கள். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடம் வலிமையாக இயங்கினால் வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழல் உருவாகும். சில எளிய பரிகாரகங்களை கடைபிடிக்கும் போது துன்பம் குறைந்து இன்பம் பெருகும்.

பொருளாதாரம்

இதுவரை நீங்கள் பெற்ற கடனை அடைக்க முடியாமல் திணறி கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலைமாறும். கடன் பெறுவதற்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகி அலுத்துப் போன உங்களுக்கு கடன் தர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தேடி வரும் காலம். எனினும் நாளை வரப் போகும் வருமானம் இன்றே கரையும். பற்றாக்குறைக்கு கடன் வாங்கியும் செலவு செய்ய வேண்டிய கஷ்டமான காலம். குறைந்த வருமானத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். செலவை சரி செய்ய நேரமில்லாமல் வேலை செய்ய வேண்டிய காலம். தொழில் விரிவாக்க கடன்,ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் என விரும்பிய கடன் தொகை கிடைக்கும். மீட்டர் வட்டி,கந்து வட்டி போடும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறாமல் வங்கிகளில் கடன் பெறுவது பாதுகாப்பு தரும்.ராசிக்குள் கேது நுழைவதல் பொருளாதாரம், பண பரிவர்த்தனை தொடர்பான வம்பு, வழக்கு வீட்டு கதவை தட்டி வரும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சட்டத்தை நாடாமல் இருப்பது நலம்.

பெண்கள்

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேஷங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் ஒன்றாக கலகலப்பாக பழகுவார்கள். மாமியர், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணப்புழக்கம்அதிகரிக்கும் நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம் சில பெண்களின் ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடத்தில் நீச கிரகங்கள், வக்ர கிரகங்கள் நின்று திருமணத் தடையை ஏற்படுத்தும்.இது போன்ற மாங்கல்ய தோஷத்தால் தடைபட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும்.வாழ்க்கைத் துணையின் ஆயுள் பலப்படும். ஆரோக்கியக் குறைபாடுஅகலும். கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

மாணவர்கள்

ஞாபக சக்தி அதிகமாகும். கல்வியில் நாட்டக் கூடும், மெத்தனப் போக்கும் சோம்பலும் மறதியும் குறையும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வில் வெற்றி சுலபமாகும் .பொதுத் தேர்வில் கடக ராசி +2மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவீர்கள். சக மாணவர்களிடம் உங்கள் தனித்திறமை வெளிப்படும். குழந்தைகளை பொதுத் தேர்வுக்கு தகுதி படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

உத்தியோகஸ்தர்கள்

வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு திறமைக்கும்,தகுதிக்கும் பொருத்தமான வேலை கிடைக்கும்.பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அடிக்கடி வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கண் துடைப்பாகவே இருக்கும்.

முதலீட்டாளர்கள்

தொழில் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க முடியாத நிலை உருவாகும். லாபம் நிற்காது அல்லது வருமானம் குறைவுபடும். விரயம் கூடுதலாகும்.குடும்பச் சுமை அதிகரிக்கும்.சிலருக்கு திடீர் இடமாற்றத்தால் குடும்பத்தைப் பிரியும் நிலை ஏற்படும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்ப வர முடியாத சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியக் குறைபாட்டால் தொல்லைகள் வரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.சிறிய உடல் உபாதைகளாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். சுய ஜாதக தசா புக்தி சாதகமாக இருப்பவர்கள் தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்ள இயலும்.

அரசியல்வாதிகள்

பாக்கிய சனியின் காலம் என்பதால் பகைவர்களிடம் கூட அன்பாக பேசி காரியத்தை சாதிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள்.ஜனன கால ஜாதகத்தில் தசா, புத்தி சாதகமாக இருந்தால் பதவி நிச்சயம். சிலருக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம்.அரசியல் வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்படும். கட்சி தொடர்பான வழக்குகளில் சிக்கினால் உங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோய் தாக்கம் இருந்தவர்களுக்கு நோயிலிருந்து விடுபட குருபகவான் அருள் புரிவார். பகையை, பகைவர்களை வெல்லக் கூடிய ஆற்றல் உருவாகும்.எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள்.

பரிகாரம்

பராமரிப்பு இல்லாத சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி தந்து உதவ கர்ம வினை நீங்கும் துப்புறவு தொழிலாளிகளுக்கு உணவு, ஆடை தானம் தர வேண்டும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X