கும்பம்: ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2026

ஏழரைச் சனியின் பிடியில் நீங்கள் இருப்பதையும் மறக்கக் கூடாது.
Kumbam
Published on: 

உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்குள் கேது பகவானும் அயன சயன விரய ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார்.குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.

விரய ஸ்தான ராகுவின் பொது பலன்கள்

பனிரெண்டாமிடம் என்பது அயன, சயன, போக, விரய ஸ்தானம் மற்றும் வெளிநாட்டு பயணத்தை குறிக்குமிடமாகும். இதை மோட்ச ஸ்தானம் என்றும் கூறலாம். மறைவு ஸ்தானத்திற்கு வரும் ராகு, கேதுக்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்கள் என்பது பலருடைய நம்பிக்கை. தற்போது ஏழரைச் சனியின் பிடியில் நீங்கள் இருப்பதையும் மறக்கக் கூடாது. கோட்சாரத்தில் சர்ப்பகிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும் போது மனிதனை பக்குவப்படுத்தி வாழ்வின் யதார்தத்தை உணர வைத்து விடும். மனிதனை லெளகீக வாழ்க்கைக்கு அழைத்து துன்பத்தை வழங்குபவர் ராகு பகவான் என்றால் துன்பத்தில் இருந்து விடுபடும் ஞானத்தினை அள்ளி வழங்குபவர் கேது பகவான் ஆவார். எத்தகைய தவறுக்கும் அஞ்சாத மனிதனைக் கூட தன் வாழ்வின் கடைசி காலத்தில் அவர் செய்த பாவ புண்ணியத்தினை சித்திக்க வைப்பவர்கள் சர்ப்ப கிரகங்கள். இத்தகைய சர்ப்ப கிரகங்கள் பனிரென்டாம் இடம் எனும் மறைவு ஸ்தானத்திற்கு வரும் போது வினைப்படி அனுபவிக்க வேண்டிய சுப, அசுப பலன்களை முழுமையாக வழங்கி விடும். விரயத்தை ராகு மிகுதிப்படுத்துவார். இன்றைக்கு சம்பாதித்த பணத்தை இன்றே செலவு செய்தால் மட்டுமே நாளைக்கு சம்பாதிக்கும் ஆசை வரும் என்ற கதையாக வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.

அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(5.12.2026 முதல் 12.4.2027 வரை)

கும்ப ராசிக்கு 3,10ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் சமுதாய அங்கீகாரத்தை தரக்கூடிய தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தம்பதிகளுக்கு தோன்றும். மிகக் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகும் தொழில் சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளை பன் மடங்காக பெருக்க குறுக்குவழியில் நாட்டம் மிகும். அதற்காக புதிய பங்கு தாரர்களை தேடும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முதலீட்டாளர்கள், ஏஜென்சி நிறுவனங்கள் தேடி வரும். இலவச ஆபர் கொடுப்பது, முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவது, ஆன்லைன் வணிகம், ஷேர் மார்க்கட், சதுரங்க வேட்டை படத்தில் மண் பாம்பை வைத்து பணம் சம்பாதிப்பது போன்ற அவயோக தொழிலை தேர்வு செய்து சட்ட சிக்கலில் மாட்ட நேரும். எனவே பேராசையை தவிர்க்க வேண்டும்.

திருவோணம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(13.4.2027 முதல் 18.12.2027 வரை)

கும்ப ராசிக்கு ஆறாம் அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் வேலை மற்றும் தொழில் மூலமும் வருமானம் குறைவுபடும். உத்தியோகத்தில் இருக்கும் சிலர் மன சஞ்சலத்தால் பார்க்கும் வேலையை விட்டு விடலாம். சிலர் பிழைப்பிற்காக வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்று விட்டால் புகழ், கெளரவம், பொருளாதாரம் உயரும். குடும்ப உறவுகளுடன் கருத்து வேறுபாடு குறையும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் உழைக்க நேரும். தாயின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கரை தேவை. வரவிற்கு தகுந்த செலவும் இருக்கும். வீண் விரயம் மற்றும் பொருளாதார நெருக்கடி மிகுதியாகும். வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

உத்திராடம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(19.12.2027 முதல் 24.6.2028 வரை

கும்ப ராசிக்கு சம சப்தம ஸ்தான அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் ஆன்மா ஒருவரை கேள்வி கேட்கும். சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு உங்களின் தன் மானத்தை கூறு போடும் விதத்தில் சோதனைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார். சிறிய விஷயத்திற்கு கூட பல முறை முயற்சிக்க நேரும். அதே நேரத்தில் எதையும் தாங்கும் மனப் பக்குவத்திற்கு உங்களை தயார்படுத்தி விடுவார். ஞாபக மறதி அதிகரிக்கும். உங்களின் ஞாபக சக்தி குறைவை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் தவறாக பயன்படுத்துவது உங்களை கவலையில் ஆழ்த்தும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் கைவிட்டுப்போனசொத்து அல்லது வேலை கிடைக்கும்.

ருண, ரோக, சத்ரு ஸ்தான கேதுவின் பலன்கள்

குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். இதுவரை வெளிநாட்டு வேலைக்காக பல முறை முயன்றவர்களின் வெளிநாட்டு கனவு நிறைவேறும். சொத்துத் பத்திரத்தின் வில்லங்களால் சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறைவு ஏற்படும். உங்களின் மூத்த சகோதரர் உங்களுக்கு விட்டுக் கொடுப்பார். சிலருக்கு வீட்டை ஆல்டர் பண்ணி கட்டி பட்ஜெட் கையை பிடிக்கும் வகையில் விரயம் மிகுதியாகும். சிலர் குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து கண் மூடித்தனமாக வாங்க நேரும். இது தொடர்பான வம்பு வழக்கால் சட்ட நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். இது போன்ற மன உளைச்சலால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கால்சிய சத்து குறைவால் பற்களில் தொந்தரவு ஏற்படும். நீண்ட நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டிய சுகர், பிரஷர், தைராய்டு போன்ற நோய் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இளவயதினருக்கு பெண் குழந்தை பிறக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு பேத்தி பிறப்பாள். மனதை மகிழ்விக்கும் சுப நிகழ்வுகள் அனைத்து நடக்கும்.

ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(5.12.2026 முதல் 14.8.2027 வரை)

கும்ப ராசிக்கு 5,8ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் சுய ஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகி புதிதாக பிறந்தது போன்ற உணர்வு உண்டாகும். உயர்வான நிலையை அடைய முடியும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு.அடமானச் சொத்துக்கள் மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும். புதிய வாகனம் வாங்கலாம். எதிர்காலத்திற்கு சேமிக்க துவங்குவீர்கள். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் ஆர்டர்கள் கிடைக்கும். தொழிலுக்கு அரசு அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.

பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(15.8.2027 முதல் 22.4.2028 வரை)

கும்ப ராசி அதிபதி மற்றும் விரய ஸ்தான அதிபதியான சனியின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் எப்பொழுதுமே எதையாவது நடக்குமா? நடக்காதா என யோசித்துக் கொண்டே இருப்பார்கள். திடீர் ஞானியாகி விடுவார்கள். தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு ஆலோசனை கூற ஆரம்பிப்பார்கள். நடை, உடை, பாவனை கூட ஞானி போல் இருக்கும். இல்வாழ்க்கையில் நாட்டம் குறையும். வீட்டில் இருக்கும் வயதான முதியவர்களை பராமரிப்பதில் உறவுகளிடையே சர்ச்சைகள் தோன்றும். சகிப்பு தன்மையோடு இருப்பது உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நல்லது. ஒரு சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிமாநிலம் சென்று தங்க நேரும். சுப கிரகங்களின் தசை புத்தி இருப்பவர்களுக்கு தடைபட்ட திருமணங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

புனர்பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(23.4.2028 முதல் 24.6.2028 வரை)

கும்ப ராசிக்கு 2,11ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் உங்களின் மனதடுமாற்றம் நீங்கி விவேகத்துடன் கூடிய வேகம், நிதானம், தைரியம் மற்றும் தெம்பு உங்களுக்குள் குடிபுகும். அதிர்ஷ்டம் உழைப்பின் மூலம் முறையான, நேர்மையான வழியில் கதவை தட்டும். அளவான நியாயமான ஆசைகள் அனைத்தும் பலிக்கும். பெரும் வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி பெருகும். வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச்சனைகள் தானாக தீரும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கும். திருமணம் தடை பட்டவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குழந்தை பாக்கியம் விரும்பியவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும். தடைபட்ட வாடகை வருமானம் வரலாம்.

பரிகாரம்

தினமும் திருக்கோளற்று பதிகம் பாராயணம் செய்ய வேண்டும்.சனிக்கிழமைகளில் சக்ரத்தாழ்வார் நரசிம்மர் வழிபாடு செய்ய மன நிம்மதி தேடி வரும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X