

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே குடும்பச் சுமை கூடும். கொள்கைப்பிடிப்போடு செயல்பட இயலாது. வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம். உடல்நலனிலும் கவனம் தேவை. பொதுவாக உங்கள் ராசியில் ராகு இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகலாம். இருப்பினும் குருவின் பார்வை இரண்டாம் இடத்தில் பதிவதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு தல வழிபாடுகளை மேற்கொண்டால் மேலும் நன்மையைப் பெறலாம்.
ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் இப்பொழுது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே படித்து முடித்தும் வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளுடைய படிப்பு சம்பந்தமாகவோ, வேலை சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் ஏற்படும். புதியவர்கள் அறிமுகமாகி பொருளாதாரநிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். திருமால் லட்சுமி, அனுமனை வழிபடுவதன் மூலம் இக்காலத்தை இனிய காலமாக அமைத்துக்கொள்ள இயலும்.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்தில் வரும் பொழுது நல்ல பலன்கள் அதிகம் நடைபெறும். பெற்றோரின் உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வாக்கு மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து செயல்பாடுகளில் வெற்றியைத் தேடிக்கொடுப்பார். பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு வியப்பர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வருமானம் உயரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவியருக்கு, ஆசிரியரின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் வழியில் சுபகாரியங்கள் முடிவாகும்.