

பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் ராகு சஞ்சரிக்கின்றார். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். ராகு-கேதுவின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். 2-ல் சனி வக்ரம் பெற்றிருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நேரம் இது. மனக்குழப்பம் அதிகரிக்கலாம். 6-ல் குரு இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். இதுபோன்ற நேரங்களில் பொறுமையும், நிதானமும் அவசியம்.
புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் ஸ்தானாதிபதி நீச்சம் பெறுவதால் தொழிலில் குறுக்கீடுகள் வரலாம். போட்டிக்கடை வைத்திருப்போரை அனுசரித்துச்செல்வது நல்லது. பாக்கிகள் வசூலாகவில்லையே என்ற கவலை அதிகரிக்கும். தேக்கநிலையில் தெளிவற்ற சூழல் உருவாகலாம். தைரியமும், தன்னம்பிக்கையும் தேவைப்படும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள் ஏற்படலாம். உடன்பிறப்புகளின் அனுசரிப்பு குறையும். கடன் பிரச்சினை தீர ஏதேனும் ஒரு சொத்தை விற்கும் சூழ்நிலை உருவாகலாம். இதுபோன்ற நேரங்களில் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மையை வழங்கும்.
உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும். இக்காலத்தில் ஓரளவு பொருளாதாரம் உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியைப் பெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீடு கட்ட, வாகனம் வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பர். பணிநீக்கம் செய்யப்பட்ட வர்களுக்கு, மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், தன ஸ்தானமான மீன ராசியில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். விரயாதிபதி சனி வக்ரம் பெறுவது நன்மைதான். ஆனால் உங்கள் ராசிநாதனான சனி வக்ரம் பெறுவது உடல் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மனவருத்தம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பமான சிந்தனை தோன்றும். இதுபோன்ற நேரங்களில் அனுமனுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் துயரங்கள் துள்ளி ஓடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்டி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் தேங்கி நிற்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. பெண்கள் தங்களின் பிரச்சினைகளை சமாளிக்க நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வரவும், செலவும் சமமாகும்.