ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஒரு புதிய கூட்டமைப்பு முழுமையாக ரூ. 16,706 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், பிளாக்ஸ்டோன் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர் டேவிட் பிளிட்சரின் போல்ட் வென்ச்சர்ஸ் ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்கள் இணைந்து ஆர்சிபியின் 100% பங்குகளை வாங்கியுள்ளன.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய தலைவராக ஆர்யமான் விக்ரம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்த சத்யன் கஜ்வானி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான ஆர்யமான் பிர்லா, ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் முன்னாள் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். இவர் 2018-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தனது முதல் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாகத் திகழும் ஆர்சிபி, புதிய நிர்வாகத்தின் கீழ் தனது முதல் போட்டியை வருகிற மார்ச் 28-ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.