அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்லும் எதிரி நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஐந்து நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீதான தனது தாக்குதல்களைத் தொடரும் என்றும், தெஹ்ரானின் எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு மட்டுமே இந்த இடைநிறுத்தம் பொருந்தும் என்றும் ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி செமாஃபார் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக திங்களன்று, ஈரானின் எரிசக்தி கட்டமைப்பை தாக்கும் திட்டத்தை டிரம்ப் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்திருந்தார். அப்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். எனினும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது.
"ஐந்து நாட்களுக்கு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது அவர்களின் எரிசக்தி தளங்கள் மீது மட்டுமே பொருந்தும். இது இராணுவ தளங்கள், கடற்படை, பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தளம் ஆகியவற்றின் மீது அல்ல. ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் ஆரம்பகட்ட முயற்சிகள் தொடரும்," என்று ஒரு அமெரிக்க அதிகாரி செமாஃபாரிடம் கூறினார்.