உலகம்

தாக்குதலை 5 நாட்கள் தள்ளிப்போட்ட டிரம்ப்.. பயந்து பின்வாங்கிவிட்டதாக ஈரான் கிண்டல் - பேச்சுவார்த்தையே கிடையாது என திட்டவட்டம்

கோபம் அடைந்த டிரம்ப், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

மாலை மலர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அத்துடன் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கத்தார் போன்ற நாடுகள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இது உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு மேலாக உலகின் முக்கியமான கடல்வழி போக்குவரத்துக்கான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாக செல்லும் எதிரிகளின் கப்பல்களை வீழ்த்துவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதனாலும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை ஈரான் மதிக்கவில்லை.

இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆனால் திடீர் யு டர்ன் அடித்த டிரம்ப், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படும் என்ற திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்று அறிவித்தார்.

மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, ஆக்கப்பூர்வாக விவாதம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் தொடருவதற்காக தாக்குதல் திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் ஈரானின் பதிலடிக்கு அஞ்சியே அமெரிக்கா பின்வாங்கிவிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் அரசுச் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "ஈரானின் கடுமையான பதிலடிக்கு அஞ்சியே டிரம்ப் தனது 48 மணிநேரக் கெடுவில் இருந்து பின்வாங்கியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாங்கள் இந்தப் போரைத் தொடங்கவில்லை, எனவே அனைத்துக் கோரிக்கைகளையும் அமெரிக்காவிடமே முன்வைக்க வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்கா ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கினால், அவை மீண்டும் கட்டப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என்றும், இஸ்ரேலின் எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

இந்த 5 நாள் போர் நிறுத்தம் முடிவடைவதற்குள் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா அல்லது அமெரிக்கா தனது அடுத்தகட்ட தாக்குதலை தொடங்குமா என்று உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.