தமிழக செய்திகள்

TN Elections 2026 | சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கருணாஸ், தமிமுன் அன்சாரி

சட்டமன்ற தேர்தலில் கருணாஸ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

மாலை மலர்

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கிட்டத்தட்ட தேர்தல் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தற்போதைய சூழலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தி.மு.க. கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 28 தொகுதிகளும், தே.மு.தி.க. கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும், ம.தி.மு.க. கட்சிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு கட்சிகள் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தல் களம் காண்கின்றன.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். எனினும், எந்தத் தொகுதியில் போட்டி என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் கருணாஸ் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்.

இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சிகள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.